அழகியமணவாளத்தில் பிள்ளையாளம்மன் கோவில் தேரோட்டம் 36 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்றது


அழகியமணவாளத்தில் பிள்ளையாளம்மன் கோவில் தேரோட்டம் 36 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்றது
x
தினத்தந்தி 19 July 2019 4:00 AM IST (Updated: 19 July 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

அழகியமணவாளத்தில் பிள்ளையாளம்மன் கோவில் தேரோட்டம், 36 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று நடைபெற்றது.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் அருகே அழகியமணவாளத்தில் பிரசித்தி பெற்ற பிள்ளையாளம்மன் மற்றும் முத்துக்கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. 1983-ம் ஆண்டு இக்கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. அதற்கு பின்னர் பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நின்றுபோனது.

தொடர்ந்து தேரோட்டம் நடைபெறாமல் போனதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்று வேதனை அடைந்த இந்த கிராம மக்கள், இந்த ஆண்டு தேரோட்டம் நடத்த முயற்சி மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து 36 ஆண்டுக்கு பின்பு தேர்த்திருவிழா கடந்த 15-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

16-ந்தேதி சாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்றுமாலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பிள்ளையாளம்மன் தேரில் எழுந்தருளினார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த தேர் நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை நீலிவனேஸ்வரர்கோவில் செயல்அலுவலர் முத்துராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் விழாக்குழுவினர் செய்திருந்தனர். குடிநீர் சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அழகியமணவாளம் ஊராட்சி செயலாளர் ரெங்கராஜ் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மதிவாணன் தலைமையில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

Next Story