அதிராம்பட்டினம் அருகே மணல் ஏற்றி சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்


அதிராம்பட்டினம் அருகே மணல் ஏற்றி சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 19 July 2019 4:15 AM IST (Updated: 19 July 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினத்தில் மணல் ஏற்றி சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே ராஜாமடத்தில் மகாராஜா சமுத்திரம் காட்டாறு உள்ளது. இந்த ஆறு மூலம் மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு, சேண்டாகோட்டை, மாளியக்காடு மற்றும் ராஜாமடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த நிலையில் காட்டாற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதால் கடல் மட்டத்தை விட காட்டாறு மட்டம் கீழே சென்று விட்டது. இதனால் காட்டாற்றில் உப்புநீராக மாறி வருகிறது. இந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மணல் கொள்ளையை தடுக்கக்கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

லாரி சிறைபிடிப்பு

இந்த நிலையில் அதிராம்பட்டினம் அருகே ராஜாமடத்தில் நேற்று மாலை மணல் ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது இதை பார்த்த பொதுமக்கள், மணல் கொள்ளையடித்து செல்வதாக லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி, அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

கடல் நீர்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காட்டாற்றில் உள்ள மணலை தோண்டி அதில் வரும் ஊற்று நீரை குடித்து வருகிறோம். மணல் கொள்ளையடிக்கப்படுவதால் கடல் நீர் உட்புகுந்து விடுகிறது. இதனால் அந்த தண்ணீரை குடிக்க முடியவில்லை. எனவே மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்றனர்.

Next Story