மாவட்ட செய்திகள்

பேரணாம்பட்டு அருகே ஆசிரியைகள் மோதல்; பள்ளிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள் கல்வி அலுவலர் விசாரணை + "||" + Teachers clash near the rally; Public to lock school Education Officer Inquiry

பேரணாம்பட்டு அருகே ஆசிரியைகள் மோதல்; பள்ளிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள் கல்வி அலுவலர் விசாரணை

பேரணாம்பட்டு அருகே ஆசிரியைகள் மோதல்; பள்ளிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள் கல்வி அலுவலர் விசாரணை
பேரணாம்பட்டு அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியை – ஆசிரியை இருவரும் சண்டை போட்டு கொண்டதால் பொதுமக்கள் பள்ளியை மூடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பேரணாம்பட்டு, 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ஏரிகுத்தியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 70 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பேரணாம்பட்டை சேர்ந்த திருமலைச்செல்வி என்பவர் தலைமை ஆசிரியையாகவும், பவுர்ணாதேவி ஆசிரியையாகவும் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 7 வருடத்திற்கு முன்பு இவர்கள் 2 பேரும் பேரணாம்பட்டு டவுன் சிவராஜ் தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்த போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் ஆசிரியை பவுர்ணாதேவி ஏரிகுத்தி பள்ளிக்கு பணிமாறுதலாகி வந்துள்ளார். இதனால் தலைமை ஆசிரியைக்கும், ஆசிரியைக்கும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த 45 நாட்களாக இருவருக்கும் இடையே யார் பெரியவர் என்பதில் மோதல் ஏற்பட்டு சண்டை போட்டு வந்துள்ளனர். இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 3 நாட்களாக ஆசிரியை பவுர்ணாதேவியின் வருகை பதிவேட்டை அவரிடம் வழங்காமல் தலைமை ஆசிரியை திருமலைச்செல்வி பீரோவில் பூட்டி வைத்து கொண்டதால் இருவருக்கும் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. ஆசிரியை பவுர்ணாதேவி கிராமமக்கள், பெற்றோர்களிடம் தலைமை ஆசிரியை திருமலைச்செல்வி செய்தது குறித்து முறையிட்டுள்ளார்.

இதன் பின்னர் நேற்று முன்தினம் பவுர்ணாதேவி, திருமலைச்செல்வி அமர்ந்திருந்த மின்விசிறி உள்ள விசாலமான வகுப்பறையில் மாணவர்களை வைத்து வகுப்பு நடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த திருமலைச்செல்வி, பவுர்ணாதேவியிடம் பள்ளிக்கு எதிர்புற சாலையில் அமைந்துள்ள பராமரிப்பு இல்லாத பழைய கட்டிடத்தில் வைத்து வகுப்புகளை நடத்துமாறு கூறியுள்ளார்.

மேலும் ஆசிரியர், மாணவர்கள் கழிப்பிட சாவியை தலைமை ஆசிரியை பூட்டி வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி கூச்சலிட்டு சண்டை போட்டனர்.

இதனை பார்த்த பொதுமக்கள் மாணவர்களை வெளியேற்றி பள்ளி கேட்டிற்கு பூட்டி போட்டு மூடிவிட்டு பேரணாம்பட்டு வட்டார கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பின்னர் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியை திறக்கும்படி கூறியதால் மதியத்திற்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தலைமை ஆசிரியை – ஆசிரியை இடையே ஏற்பட்ட இந்த சண்டையால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவரையும் பணியிட மாறுதல் செய்து வேறு ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.