கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கவர்னர் ‘கெடு’ விதித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் குமாரசாமி வழக்கு சட்டசபை கூட்டம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு


கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கவர்னர் ‘கெடு’ விதித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் குமாரசாமி வழக்கு சட்டசபை கூட்டம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 20 July 2019 5:30 AM IST (Updated: 20 July 2019 5:21 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் விவகாரத்தில் கவர்னர் ‘கெடு’ விதித்ததை எதிர்த்து, முதல்-மந்திரி குமாரசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்தநிலையில் சட்டசபை கூட்டம் வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்ததால் முதல்-மந்திரி குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்காததால், அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் என்று கூறியதோடு, சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள போதிலும் தனது அரசுக்கு மெஜாரிட்டி பலம் இருப்பதாகவும், சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து அதை நிரூபிக்க தயார் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி முதல்- மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்தார். மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வரவில்லை.

நம்பிக்கை தீர்மானத்தின் மீது உடனடியாக வாக்கெடுப்பு நடத்துமாறு எதிர்க்கட்சி (பாரதீய ஜனதா) தலைவரான எடியூரப்பா வற்புறுத்த, 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து விளக்கம் கேட்க வேண்டி இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை ஒத்திவைக்கவேண்டும் என்று சட்டசபை காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், பாரதீய ஜனதா தலைவர்கள் தன்னை நேரில் சந்தித்து மனு அளித்ததை தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பை இரவு 12 மணிக்குள் முடிக்குமாறு சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு கவர்னர் வஜூபாய் வாலா கடிதம் எழுதினார். ஆனால் அதை சபாநாயகர் நிராகரித்துவிட்டார்.

இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டதால், நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில், நாள் முழுவதும் சபை ஒத்திவைக்கப்பட்டது.

என்றாலும் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து வெளியேறாமல் சட்டசபை அரங்கத்திலேயே இரவில் தங்கினார்கள். அங்கேயே சாப்பிட்டுவிட்டு தூங்கினார்கள்.

இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை 19-ந் தேதி (அதாவது நேற்று) மதியம் 1.30 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமிக்கு கவர்னர் நேற்று முன்தினம் இரவு ‘கெடு’ விதித்தார்.

இந்த சூழ்நிலையில், சட்டசபை நேற்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பேசிய சபாநாயகர் ரமேஷ்குமார், “சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் குழப்பம் இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து சட்ட ஆலோசனை கேட்டு பெற்றுள்ளேன். அதை படித்து பார்த்த பிறகு மாலைக்குள் உத்தரவு பிறப்பிக்கிறேன்” என்றார்.

அதன்பிறகு நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய முதல்-மந்திரி குமாரசாமி, கடந்த ஓராண்டாக நிம்மதியாக ஆட்சி செய்ய பாரதீய ஜனதா விடவில்லை என்றும், தற்போது 7-வது முறையாக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். கடந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளையும் அப்போது அவர் விவரித்தார்.

இதைத்தொடர்ந்து, நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா கோரிக்கை விடுத்தார். அதற்கு சபாநாயகர், தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் தொடர்ந்து விவாதம் நடத்த வேண்டி இருப்பதால் உடனடியாக ஓட்டெடுப்பு நடத்த முடியாது என்று கூறினார். இதற்கு பாரதீய ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், மதிய உணவு இடைவேளைக்காக மதியம் 1.30 மணிக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.

தான் ஏற்கனவே விதித்த ‘கெடு’வின்படி மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படாததால், மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்று மறுபடியும் கெடு விதித்து முதல்-மந்திரி குமாரசாமிக்கு கவர்னர் வஜூபாய் வாலா மற்றொரு கடிதம் அனுப்பினார். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரம் நடப்பதாக தனக்கு புகார்கள் வந்திருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு சபை மீண்டும் கூடியதும், நம்பிக்கை தீர்மானத்தின் மீது தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) உறுப்பினர்கள். சபையை வருகிற திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

இதற்கு பாரதீய ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இன்றே ஓட்டெடுப்பை நடத்தவேண்டும் என்றும் கூறினார்கள்.
என்றாலும் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், இரவு 8.30 மணி அளவில், சபையை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துவிட்டு வெளியேறினார்.

இதற்கிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிப்பது தொடர்பாக ‘கெடு’ விதித்து கவர்னர் கடிதம் அனுப்பியதை எதிர்த்து முதல்-மந்திரி குமாரசாமி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்து வரும் நிலையில், அதன் மீது ஓட்டெடுப்பு நடத்துவது குறித்து கவர்னர் உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்றும், கவர்னரின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்கு முரணாக உள்ளது என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

இதேபோல் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார்.

அதில், “சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கும் உரிமை கட்சி கொறடாவுக்கு உள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 17-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை வற்புறுத்தக்கூடாது என்று கூறி உள்ளது. இது அரசியல் கட்சிகளுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையை பறிப்பது போல் உள்ளது” என்று அவர் கூறி உள்ளார்.

Next Story