கடலில் மூழ்கிய 2 குமரி மீனவர்கள் உயிர் தப்பியது பற்றி உருக்கமான தகவல் 8 மணி நேரம் நீந்தி கரை சேர்ந்தனர்


கடலில் மூழ்கிய 2 குமரி மீனவர்கள் உயிர் தப்பியது பற்றி உருக்கமான தகவல் 8 மணி நேரம் நீந்தி கரை சேர்ந்தனர்
x
தினத்தந்தி 21 July 2019 4:30 AM IST (Updated: 21 July 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடிக்க சென்ற போது படகு உடைந்து 5 குமரி மீனவர்கள் கடலுக்குள் விழுந்து விட்டனர். இதில் 3 மீனவர்களை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. உயிர் தப்பிய 2 பேர் 8 மணி நேரம் கடலில் நீந்தி கரை சேர்ந்துள்ள உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

கருங்கல்,

குமரி மாவட்டம் நீரோடி பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி. இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் இவரும் அதே பகுதியை சேர்ந்த நிக்கோலஸ், ராஜூ, ஜாண் போஸ்கோ, சகாயம் ஆகியோர் கேரள மாநிலம் நீண்டகரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 17-ந் தேதி மீன்பிடிக்க சென்றனர். பின்னர் மறுநாள் இரவு கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில் துறைமுக முகத்துவாரம் பகுதியை நெருங்கிய போது பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இந்த சீற்றம் தொடர்ந்து நீடித்ததால் மீனவர்களால் கரை திரும்புவதில் சிரமம் ஏற்பட்டது. அதே சமயத்தில் திடீரென படகு உடைந்தது. இதனால் 5 மீனவர்களும் கடலுக்குள் விழுந்து விட்டனர்.

இதற்கிடையே குமரி மீனவர்களின் படகு உடைந்த நிலையில் துறைமுக அலை தடுப்பு சுவரில் கிடந்தது. இதை பார்த்த சக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடலோர காவல்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே மீனவர்களை தேடினர். மாயமான மீனவர்களில் ஸ்டான்லி, நிக்கோலஸ் ஆகியோர் ஆபத்தான நிலையில் நீந்தி கொல்லம் கடற்கரையில் சேர்ந்தனர். பின்னர் அவர்களை மீட்டு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நிக்கோலசுக்கு முகம் மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

பின்னர் 2 பேரும் சிகிச்சைக்கு பிறகு சொந்த ஊர் திரும்பினர். தொடர்ந்து ஸ்டான்லி நிருபர்களிடம் கூறுகையில், கடலில் ஏற்பட்ட சீற்றத்தால் படகு உடைந்து கடலுக்குள் மூழ்கினோம். 5 பேரும் படகில் இருந்த தண்ணீர் கேனை பிடித்த படி நீந்தினோம். சீற்றம் அதிகமாக இருந்ததால் ராஜூ, ஜாண் போஸ்கோ, சகாயம் ஆகிய 3 பேரும் நீந்த முடியாமல் அடுத்தடுத்து கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.

நிகோலசும், நானும் சுமார் 8 மணி நேரம் கடலில் நீந்தி கரை சேர்ந்தோம். மற்றவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையே மாயமான 3 மீனவர்களை தேடும் பணி நீண்டகரை துறைமுக பகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை அவர்களை பற்றி எந்தவொரு தகவலும் இல்லாததால் ஏதும் விபரீத சம்பவம் நடந்து இருக்குமோ என்ற அச்சத்தில் அவர்களுடைய குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். 

Next Story