அம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


அம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 July 2019 11:00 PM GMT (Updated: 20 July 2019 7:38 PM GMT)

மகாலெட்சுமி அம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டுமகாதானபுரத்தில் பிரசித்தி பெற்ற மகாலெட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்தாண்டும் திருவிழா நடக்கிறது. இதில் வருகிற 3-ந்தேதி தீர்த்தவாரியும், 4-ந்தேதி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் லியாகத் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் இருவேறு சமுதாயத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அதில் ஒரு சமூகத்தினர் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கக்கூடாதென தெரிவித்தனர். மேலும் தங்கள் சமூகத்தினருக்கு உரிய மரியாதை அளிக்காமல் மற்றொரு சமூகத்தினர் தங்களை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தலையில் தேங்காய் உடைக்கக்கூடாதென தெரிவித்த சமூகத்தினர் கூட்டத்தைவிட்டு வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து ஊர்முக்கியஸ்தர்கள் கூட்டத்தைவிட்டு வெளியேறிய சமூகத்தினரிடம் பேசி அவர்களை கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டுமென கேட்டுக்கொண்டதின்பேரில் அவர்கள் மீண்டும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதன்பின்னர் கூட்டத்தில் திருவிழாவில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. அதில் வருகிற 4-ந்தேதி காலை 9 மணிக்கு வழக்கம்போல் தேங்காய் உடைக்கும் வைபவம் தொடங்கப்படும். தேங்காய் உடைத்து வரும் பக்தர்களுக்கு தண்ணீர் வசதி அறநிலையத்துறை ஏற்படுத்தித்தர வேண்டும். பக்தர்கள் விருப்பத்திற்கு இணங்க தேங்காய் உடைக்கப்படும். இதற்கு காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

கோவில் வளாகத்திற்குள் குறிப்பிட்ட சமூகத்தினர் சார்பில் பேனர்கள், ஒலிபெருக்கிகள் கட்டி விளம்பரம் செய்தல், பொது இடங்களில் விளம்பர தட்டிகள் வைக்கக்கூடாது. கோவில் நிர்வாக ஒலிபெருக்கியினால் மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்யவேண்டும். ஒவ்வொரு இனத்தவரும் கோவிலில் செய்ய உள்ள நிகழ்ச்சிகள் குறித்து முன்கூட்டியே அறநிலையத்துறை அதிகாரிக்கு எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

கோவில் சுற்றுச்சுவருக்குள் தங்கள் இனப்பெயர்களை தெரிவித்து வரிவசூல் செய்யக்கூடாது. திருவிழாவின்போது கோவில் வளாகத்திற்குள் வாண வெடிகளை உபயோகிக்கக்கூடாது. தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் இடத்தில் செல்போன் கொண்டுவரவோ, அதன்மூலம் படம் எடுக்கவோ அனுமதிக்க படக்கூடாது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் காவல்துறை, தீயணைப்புத்துறை, போக்குவரத்துத்துறை, ஊராட்சி நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறையினர் மேற்கொள்ளவேண்டிய பணிகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வாசித்த பிறகு அனைவரிடமும் கையெழுத்து பெறப்பட்டது. அப்போது தலையில் தேங்காய் உடைக்கக்கூடாதென வலியுறுத்தியவர்கள் மட்டும், கையெழுத்திடாமல் புறக்கணித்து வெளியேறினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை, காவல், தீயணைப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பல துறை சார்ந்த அதிகாரிகள், ஊர்முக்கியஸ்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story