தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழர்கள் டெல்லிக்கு சென்று போராட வேண்டும் - கனிமொழி எம்.பி. பேச்சு


தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழர்கள் டெல்லிக்கு சென்று போராட வேண்டும் - கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 21 July 2019 5:15 AM IST (Updated: 21 July 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழர்கள் டெல்லிக்கு சென்று போராட வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

மதுரை,

மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி மதுரை பழங்காநத்தத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார். வக்கீல் ஹென்றி திபேன் தேசிய கல்விக்கொள்கை குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:–

சமூகநீதியை சீர்குலைக்கும் குலக்கல்வித்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. கல்வி மேம்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தேசிய கல்விக்கொள்கையானது காலம் முழுவதும் பா.ஜ.க.வை ஆட்சியில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்படுகிறது. இந்தியாவை இந்துத்துவ நாடாக, இந்திமொழி பேசும் நாடாக ஒற்றை கொள்கை கொண்ட நாடாக மாற்ற விரும்புகின்றனர். உலகிலேயே மிகச்சிறந்த கல்விக்கொள்கையை கொண்ட பின்லாந்து நாட்டில் கூட தேசிய தகுதித்தேர்வுகள் கிடையாது. இங்கு 3 வயது குழந்தைக்கு கல்வி கட்டாயம். ஆனால், ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். நிதி ஒதுக்கப்படாது.

அங்கன்வாடி, பால்வாடி மைய பணியாளர்களுக்கு 6 மாத பயிற்சி அளிக்கப்படும். இந்த கல்வியின் தரம் எப்படியிருக்கும். நாட்டின் பண்பாட்டை அனைவருக்கும் பொதுவானதாக கற்றுத்தருவதாக கூறுகின்றனர். அனைவரையும் சமமாக மதிக்கும் தமிழர்களின் பண்பாட்டுக்கும், ஏற்றத்தாழ்வு பார்க்கும் உங்களது பண்பாட்டும் சமமாகாது. இந்த கொள்கையின் அடிப்படையே தவறு. எந்த நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டிய நிலையை தற்போதைய மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. இந்த கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்காக தளபதி ஒரு குழுவை அமைத்துள்ளார்.

அந்த குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இந்த கல்வித்திட்டத்துக்கு எதிரான தமிழர்களின் முழக்கம் டெல்லியிலும் கேட்க வேண்டும். அங்கு சென்று தமிழர்கள் போராட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story