தமிழ்மொழி வளர்ச்சிக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பேச்சு


தமிழ்மொழி வளர்ச்சிக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பேச்சு
x
தினத்தந்தி 22 July 2019 4:15 AM IST (Updated: 22 July 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்மொழி வளர்ச்சிக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பேசினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் கம்பன் கழகத்தின் 44-ம் ஆண்டுவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 2-வது நாள் நிகழ்ச்சிக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் தலைமை தாங்கி, கம்பன் மாமணி, இலக்கிய மாமணி உள்ளிட்ட விருதுகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசிய தாவது:-

தமிழ் முக்காலத்தை உணர்த்திய மொழி. அது அழியா சான்று பெற்றது. தமிழ் மொழியை புறக்கணிக்க கூடாது. ஒரு மன்னன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கம்பன் ராம காவியத்தில் உணர்த்தியுள்ளார். ராமராஜ்யம் என கூறுவதை கம்பராஜ்யம் என கூற வேண்டும். சொல்ல வந்ததை சுருங்க கூறியதை கம்பன் உணர்த்தி உள்ளார். பல ஆயிரம் வார்த்தைகளை சுருங்க கூறியவர்.

தமிழ் படித்தால் வேலை

தற்போது பொருளாதாரம் சார்ந்த கல்வியறிவு தேவை. ஆங்கில மொழி அவசியம் தேவை. அதற்காக தமிழ் மொழியை மறக்க கூடாது. இதுபோன்ற இலக்கிய விழாக்களில் இளைஞர்களை அழைத்து வர வேண்டும்.தமிழ்மொழியை இருகண்கள் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். 16 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சியில் தேக்க நிலையை நீதிமன்றம் தலையிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு உருவானது.

இலங்கை தமிழர்கள் புலம் பெயர்ந்த பகுதிகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகின்றனர். அவர்கள் செய்ததை கூட தமிழகத்தில் 10-ல் ஒரு பங்கு இல்லை. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை தேவை. தொழில் வளர்ச்சிக்கு காட்டும் முக்கியத்துவத்தை, தமிழக அரசு தமிழ்மொழி வளர்ச்சிக்கும் கொடுக்க வேண்டும். தமிழ் படித்தால் வேலை கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகவரி இழந்து வாழ முடியாது

அதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு மற்றொரு நீதிபதி சுரேஷ்குமார் பேசுகையில், பக்தி, இலக்கியங்கள் எவை என்பது குறித்து இளைய தலைமுறையினருக்கு தெரியவில்லை. தமிழ்மொழி தொன்மையானது. கம்ப ராமாயணம் பக்தி மற்றும் இலக்கியத்தை நினைவூட்டி வருகிறது. கம்பன் காவியம் உலகம் முழுவதும் பரவ வேண்டும். எந்த ஒரு மனிதனும் முகவரி இழந்து வாழ முடியாது.

தமிழ்மொழியை மறக்காமல் அவற்றின் காவியங்களை பின்பற்றி இளைய தலைமுறையினரை கற்க உதவ கம்பன், திருக்குறள், சேக்கிழார் போன்ற இலக்கிய அமைப்பு விழாக்களில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியை கம்பன் கழக செயலாளர் சம்பத்குமார் தொகுத்து வழங்கினார். முன்னதாக துணை செயலாளர் அய்யாவு வரவேற்றார். முடிவில் விழாக்குழு உறுப்பினர் கருணாகரன் நன்றி கூறினார்.

Next Story