கரூர்-திருச்சி மாவட்டங்களில் நீர்நிலைகளை தூர்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும்


கரூர்-திருச்சி மாவட்டங்களில் நீர்நிலைகளை தூர்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும்
x
தினத்தந்தி 22 July 2019 4:15 AM IST (Updated: 22 July 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

கரூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் நீர்நிலைகளை தூர்வாரி அதில் மழைநீரை சேமித்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கிழக்கு மண்டல இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர்,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கிழக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் கோவை ரோட்டிலுள்ள ஒரு ஓட்டல் அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு, மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி தலைமை தாங்கி பேசினார். கிழக்கு மண்டல இளைஞரணி செயலாளர் விக்னேஷ்வர், மாநில வர்த்தக அணி செயலாளர் விசா ம.சண்முகம், மாநில துணை பொது செயலாளர் சக்தி கோச் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு

இந்த கூட்டத்தில், முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் வணிகத்திற்கு வர இருக்கிற அனைத்து நிறுவனங்களிலும், கொங்கு நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீட்டினை தமிழக அரசு வழங்கிட வேண்டும். கரூர், திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் ஏரி, குளம், வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி அதில் மழைநீரையும், ஆறுகளிலிருந்து கிடைக்கும் உபரிநீரையும் சேமிக்க வழிவகை செய்ய வேண்டும்.

கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இந்த மாவட்டங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும்.

அரசு மருத்துவ கல்லூரிக்கு...

கரூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு “தீரன் சின்னமலை” பெயரை வைக்க வேண்டும். நிறுவன தலைவர் கோவை செழியனுக்கு கொங்கு மாமணி விருது வழங்குகிற சென்னை கொங்கு நண்பர்கள் சங்கத்துக்கு நன்றி தெரிவிப்பது, தீரன் சின்னமலையின் நினைவஞ்சலி நிகழ்ச்சியினை ஓடாநிலையில் கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டு கொண்டாடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி (கரூர் கிழக்கு), ரமேஷ் (கரூர் மேற்கு), சேகர் (திருச்சி), அருள் (திண்டுக்கல்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story