மூலனூர் பகுதிகளில் வழிப்பறி,திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது


மூலனூர் பகுதிகளில் வழிப்பறி,திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 July 2019 11:00 PM GMT (Updated: 21 July 2019 8:55 PM GMT)

மூலனூர் சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறி மற்றும் வீடுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய நகைக்கடைக்காரரையும் போலீசார் கைது செய்தனர்.

மூலனூர்,

திருப்பூர் மாவட்டம் மூலனூர் வடுகப்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார்சைக்கிளில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் சக்திவேலை தடுத்து நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.850–ஐ பறித்து சென்றனர்.

இது குறித்து மூலனூர் போலீசில் சக்திவேல் புகார் செய்தார். அதன் பேரில் மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தர் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த ஆசாமிகள் 2 பேரையும் தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மூலனூர் தனிப்படை போலீசார் பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதன் காரணமாக அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் காந்தி தெருவை சேர்ந்த நிர்மல்பாரதி என்கிற குமார் (26), மற்றொருவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி கணக்கன்பட்டி அருகே உள்ள கோம்பைபட்டியை சேர்ந்த 18 வயது வாலிபர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் சக்திவேலை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் இவர்கள் இருவரும் மூலனூர் அருகே உள்ள காதக்கோட்டை பாலசுப்பிரமணி என்பவரது வீட்டில் 10 பவுன் நகைகள், மூலனூர் அருகே உள்ள நல்லசெல்லிபாளையத்தில் ராஜாமணி என்பவர் வீட்டில் 6 பவுன் நகை மற்றும் தாராபுரம் ஜவுளிக்கடை அதிபர் ராமலிங்கம் என்பவரது வீட்டில் 87 பவுன் நகைகள் ஆகியவற்றை திருடியதும், அத்துடன் தாராபுரம் ஆர்.கே.ஆர். நகரில் நடந்து சென்ற ஒரு பெண் அணிந்திருந்த 6 பவுன் தாலிக்கொடியை பறித்ததும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் கொள்ளையடித்த நகைகளை கோவையில் நகைக்கடை நடத்தி வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த தினேஷ்குமார்(39) என்பவரிடம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருட்டு நகைகளை வாங்கிய குற்றத்திற்காக தினேஷ்குமாரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைதானவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகளை மட்டும் போலீசார் மீட்டனர். அதைத்தொடர்ந்து கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story