துப்பாக்கி தொழிற்சாலையில் போராட்டம் தொடர்பாக தொழிலாளர்களிடையே தள்ளுமுள்ளு 9 பெண்கள் காயம்


துப்பாக்கி தொழிற்சாலையில் போராட்டம் தொடர்பாக தொழிலாளர்களிடையே தள்ளுமுள்ளு 9 பெண்கள் காயம்
x
தினத்தந்தி 22 July 2019 11:00 PM GMT (Updated: 22 July 2019 7:21 PM GMT)

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் நடந்த போராட்டம் தொடர்பாக தொழிலாளர்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 9 பெண்கள் காயமடைந்தனர்.

திருவெறும்பூர்,

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்த 150 பேரை, புதிதாக காண்டிராக்ட் எடுத்த நிறுவனம் தவிர்த்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமித்தது. இதனால் வேலை இழந்த 150 பேர் கடந்த ஒரு மாத காலமாக தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் தங்களை மீண்டும் வேலைக்கு சேர்த்துக்கொள்ள வேண்டுமென பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் தொழிற்சங்கங்கள் சார்பில் கஞ்சி தொட்டி திறக்கப்பட்டு, எதிர்ப்பை தெரிவித்தனர். இதற்கு துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகமும், காண்டிராக்ட் எடுத்த நிர்வாகமும் செவிசாய்க்காத நிலையில் நேற்று காலை முதல் சொசைட்டி ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் பெரியசாமி தலைமையில் வீரமணி, சங்கிலிமுத்து, சித்திரவேல், பழனியாண்டி ஆகிய 5 பேர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அங்கு வந்த வேலை இழந்த தொழிலாளர்கள், மற்றொரு காண்டிராக்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் பணிக்கு செல்லாமல் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கூறினர். மேலும் அவர்களை பணிக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் வேலை இழந்துள்ள இலந்தப்பட்டியை சேர்ந்த மங்களம்(50), அதே பகுதியை சேர்ந்த பாலாமணி (45), பூலாங்குடியைச் சேர்ந்த செல்வத்தின் மனைவி தேவி(30), காந்தலூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த யேசுராஜ் மனைவி அடைக்கலமேரி (39), இலத்தப்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி மனைவி மாரியாயி (32) ஆகிய 5 பேரும், மற்றொரு காண்டிராக்டில் வேலை செய்யும் பூலாங்குடி காலனி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ராயர் மனைவி வசந்தராணி (35), குண்டூர் அயன்புதூரை சேர்ந்த சின்னம்மா (51), பூலாங்குடி காலனி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சுந்தரி (44), அதே பகுதியை சேர்ந்த மனோன்மணி (50) ஆகிய 4 பேரும் என 9 பெண்கள் காயமடைந்தனர். இவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தால் துப்பாக்கி தொழிற்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story