பணிமனை மேலாளர் மீது தாக்குதல்: அரசு பஸ் டிரைவர்கள்- கண்டக்டர்கள் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை


பணிமனை மேலாளர் மீது தாக்குதல்: அரசு பஸ் டிரைவர்கள்- கண்டக்டர்கள் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 23 July 2019 4:30 AM IST (Updated: 23 July 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

பணிமனை மேலாளர் மீது தாக்குதல் நடத்தியவரை கைது செய்யக்கோரி அரசு பஸ் டிரைவர்கள்-கண்டக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனை மேலாளராக இருப்பவர் கார்த்திகேயன்(வயது35). இவர் நேற்று குளித்தலை பஸ்நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த மினிபஸ் நிறுவனம் ஒன்றின் மேலாளர் தர்மராஜ் (48), அங்கிருந்த அரசு பஸ்சின் முன்னால், மினிபஸ்சை வழிமறித்து நிறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கேட்ட பணிமனை மேலாளர் கார்த்திகேயனை தர்மராஜ் திட்டி, தாக்கி, அரசு பணி செய்யவிடாமல் தடுத்து, கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த கார்த்திகேயன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணிமனை மேலாளர் தாக்கப்பட்டதை கண்டித்தும், அவரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தியும், பஸ்களை குளித்தலை பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள், பணிமனை மேலாளரை தாக்கியவரை கைது செய்தால் மட்டுமே பஸ்களை இயக்குவோம் என தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவரிடம், குளித்தலை பஸ்நிலையத்தில் மினி பஸ்கள் வந்து செல்வதற்கு உரிய அனுமதி இல்லை. ஆனால் விதிகளைமீறி பஸ் நிலையத்திற்குள் மினிபஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் அரசு பஸ்கள் நிறுத்தும் இடத்தில் மினிபஸ்களை நிறுத்தி ஆட்களை ஏற்றுகின்றனர். இதுகுறித்து கேட்கும் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களை மிரட்டுவதோடு, சிலரை தாக்கவும் வந்துள்ளனர். மினிபஸ்கள், பஸ்நிலையத்தில் நிறுத்தி ஆட்களை ஏற்றுவதால் அரசுக்கு பெரிதும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் அரசு பணிசெய்த பணிமனை மேலாளரை தாக்கியவர்கள், எங்களையும் தாக்கக்கூடும் என்பதால், எங்களது உயிருக்கு உத்தரவாதம், பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மினிபஸ்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழித்தடத்தில் மட்டுமே அந்த பஸ்கள் இயக்கப்படவேண்டும், குளித்தலை பஸ்நிலையத்திற்குள் கண்டிப்பாக மினி பஸ்கள் வரக்கூடாது. மேலும் அரசு பணிமனை மேலாளரை தாக்கியவரை உடனடியாக கைது செய்யவேண்டுமென அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மினிபஸ்கள் இயக்கவேண்டிய வழித்தடத்தில் இயக்க போக்குவரத்து வாகன ஆய்வாளரிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பஸ்களை இயக்கினர். இச்சம்பவம் குறித்து பணிமனை மேலாளர் கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில், தர்மராஜ் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story