குறைதீர்க்கும் நாள் கூட்டம்: புகளூர் வாய்க்காலை தூர்வாரக்கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு


குறைதீர்க்கும் நாள் கூட்டம்: புகளூர் வாய்க்காலை தூர்வாரக்கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 22 July 2019 10:45 PM GMT (Updated: 22 July 2019 7:51 PM GMT)

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகளூர் வாய்க்காலை தூர்வாரக்கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் சாலைவசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொடர்பான 321 கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் குளித்தலை அருகேயுள்ள ராக்கம்பட்டி கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்கள் ஊரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளது. எனவே எங்கள் பகுதியில் புதிதாக மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி அமைத்து சீராக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீரை வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ராக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் படிப்பினை நிறைவு செய்து விட்டு, அந்த குழந்தைகள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று உடையப்பட்டியிலுள்ள பள்ளிக்கு செல்வதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த தொடக்க பள்ளியை, நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

அரங்கநாதம்பேட்டையை சேர்ந்த சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர் ஞானசேகர் உள்ளிட்டோர் அளித்த மனுவில், நெரூர் தென்பாகம் கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை பெற மருத்துவ சான்று பெற்று வந்தால் தான் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர் என எண் பதிவிடப்பட்டு முத்திரையிடப்பட்டு வழங்கப்படும் என கூறுகிறார்கள். எனவே இது பற்றி உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். புகளூர் தாலுகா கிழக்கு தவுட்டுபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் ஊரிலுள்ள ஒரு கோவிலின் இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, எங்களது வழிபாட்டுக்கு இடையூறு செய்கின்றனர். எனவே இது பற்றி உரிய விசாரணை மேற்கொண்டு கோவில் இடத்தினை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

புகளூர் நதிநீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், தளவாபாளையம்-கிழக்கு தவுட்டுப்பாளையம் ரோடு பகுதியில் செல்லும் புகளூர் வாய்க்காலில் கல் பாலத்திலிருந்து கிழக்கு கடைமடை பகுதி வரை நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் பராமரிப்பின்றி கிடக்கிறது. எனவே இங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி கரைகளை பலப்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அன்பழகன் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இந்த கூட்டத்தின் போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக கண்பார்வை குறைபாடு உள்ள 7 பேருக்கு பிரெய்லி கடிகாரம் மற்றும் நவீன மடக்கு குச்சியையும், ஒரு மாணவிக்கு தாங்கு கட்டைகளையும் கலெக்டர் வழங்கினார். மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் ஒருவருக்கு அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.4 லட்சத்து 84 ஆயிரத்திற்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார். முன்னதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என்று மாவட்ட சித்தமருத்துவப்பிரிவிற்கு கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து, நிலவேம்பு கசாயம் கொண்டுவரப்பட்டது. அதனை தான் அருந்தி விட்டு, பொதுமக்களுக்கும் கலெக்டர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வசுரபி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி, மாவட்ட வழங்கல் அதிகாரி மல்லிகா, உதவி ஆணையர் (கலால்) மீனாட்சி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story