போதை நபர்களின் தொல்லையை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
‘‘போதை நபர்களின் தொல்லைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?’’ என்று டாஸ்மாக் அதிகாரிக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் செயல்படும் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றின் முதல்வர் சரவணன் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
எங்கள் கல்லூரி இருக்கும் இடத்தில் போதை மறு வாழ்வு மையம் நடத்துகிறோம். எங்கள் கல்லூரியில் 1,025 மாணவர்களும், 130 மாணவிகளும் படிக்கின்றனர். அங்குள்ள விடுதியில் 120 மாணவர்கள் தங்கியுள்ளனர். மறுவாழ்வு மையத்தில் 60 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
போதை மறுவாழ்வு மையத்தின் அருகே டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குடிபோதையில் இருந்து மீட்பவர்களுக்கான மறுவாழ்வு மையம் அருகே டாஸ்மாக் கடை திறப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இதனால் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் போதை மறுவாழ்வு மையம் அருகே டாஸ்மாக் கடை, மதுபான பார் திறக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி அருகில் டாஸ்மாக் கடை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும்“ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மதுரை மாவட்டத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன? சட்டவிரோத மதுபான ‘பார்’கள் எத்தனை உள்ளன? போதை நபர்களின் தொல்லைகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான ‘பார்’களில் சுகாதாரத்தை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக மதுரை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 6–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.