9 மாடி தொலை தொடர்பு நிறுவன கட்டிடத்தில் பயங்கர தீ்: மொட்டை மாடியில் தவித்த 84 ஊழியர்கள் மீட்பு
மும்பையில் தொலை தொடர்பு நிறுவனத்தின் 9 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மொட்டை மாடியில் சிக்கி தவித்த 84 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மும்பை,
மத்திய அரசின் மகாநகர் டெலிகாம் நிகம் லிமிடெட் (எம்.டி.என்.எல்.) நிறுவனம் மும்பை, டெல்லியில் தொலைதொடர்பு சேவையில் ஈடுபட்டு வருகிறது. மும்பையில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் மேற்கு புறநகர் பாந்திராவில் உள்ள எஸ்.வி. சாலை பகுதியில் 9 மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. வேலை நாளான நேற்று ஊழியர்கள் வழக்கம் போல பணிக்கு வந்து இருந்தனர்.
இந்த நிலையில், பிற்பகல் 3 மணியளவில் எம்.டி.என்.எல். அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் திடீரென தீப்பிடித்தது. கட்டிடத்தில் இருந்து கரும்புகை குபுகுபுவென வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. வேகமாக எரிந்த தீ 4-வது மாடிக்கும் பரவியது.
இதை அறிந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர். மேலும் பலர் கட்டிடத்தில் சிக்கி கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் மொட்டை மாடிக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். ஒருபுறம், கட்டிடத்தில் தீ எரிந்து கொண்டு இருந்தது. மறுபுறம், கட்டிடம் புகை மூட்டத்தில் மூழ்கி கொண்டு இருந்தது. இந்த ஆபத்தான தருணத்தில் ஊழியர்கள் பலர் உயிரை கையில் பிடித்து கொண்டு மொட்டை மாடியில் தவித்தனர்.
14 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.
மேலும் கட்டிடத்தில் சிக்கி தவித்த அனைவரையும் ராட்சத ஏணி மற்றும் நவீன உபகரணங்கள் மூலம் சுமார் 4 மணி நேரம் போராடி மீட்டனர். மொத்தம் 84 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்டவர்களில் பலர் புகை மூட்டத்தால் சுவாச பிரச்சினையில் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
கட்டிடத்தின் அருகே உள்ள அஞ்சுமின்-இ-இஸ்லாம் என்ற பெண்கள் உயர்நிலைப்பள்ளியை புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் மாணவிகள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story