ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 24 July 2019 4:30 AM IST (Updated: 24 July 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சையில், வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று பேரணி நடந்தது. விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

பின்னர் அவர்கள் கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

போராட்டம் தொடரும்

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுடன் பேராசிரியர்கள் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு செல்லுமாறு வலியுறுத்தினர். அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரையில் எங்களது போராட்டம் தொடரும் என கூறி மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி விட்டு வகுப்புக்கு சென்றனர்.

மாணவ, மாணவிகளின் இந்த போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story