ரெயில்வே கீழ்பாலம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்; போலீஸ் குவிப்பு அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு


ரெயில்வே கீழ்பாலம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்; போலீஸ் குவிப்பு அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 24 July 2019 4:15 AM IST (Updated: 24 July 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே ஆலக்குடியில் ரெயில்வே கீழ்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை- திருச்சி இடையே மின்சார ரெயில் சேவைக்கான பணிகள் நடைபெற்று முடிவடைந்து உள்ளன. ரெயில்வே துறையினர் அனைத்து பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். தஞ்சை அருகே ஆலக்குடி ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் சேவைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆலக்குடி ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட் அருகே லெவல் கிராசிங்குக்கு பதிலாக ரெயில்வே கீழ்பாலம் அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரெயில்வே கீழ்பாலம் அமைக்கும் பணியை ஆய்வு செய்வதற்காக ரெயில்வே அதிகாரிகள் இப்பகுதியில் கான்கிரீட் கட்டமைப்புகளை உருவாக்கும் பணியை மேற்கொண்டனர். அப்போது இப்பகுதி விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து தற்காலிகமாக அப்பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் ஆலக்குடி ரெயில்வே கேட் அருகே கீழ்பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்வதற்காக ரெயில்வே காண்டிராக்டர்கள், தொழிலாளர்கள் வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆலக்குடி பகுதி விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் ரெயில்வே கேட் அருகே ஒன்று திரண்டு ரெயில்வே கீழ்பாலம் அமைக்கும் வேலையை தொடங்க வந்தவர்களிடம் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் அவர்கள் பணிகளை நிறுத்தக்கோரி கோஷம்எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். மேலும் போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார் இது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரெயில்வே கீழ்பாலம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. மேலும் இது குறித்து அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக போலீசார் விவசாயிகளிடம் கூறினர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இது குறித்து ஆலக்குடியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

வல்லம் மற்றும் ஆலக்குடியில் இருந்து கள்ளப்பெரம்பூர், சித்தாயல், ராயந்தூர், தென்னங்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி ஆகிய ஊர்களுக்கு செல்ல ஆலக்குடி ரெயில்வே கேட் பிரதான சாலையாக உள்ளது. நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த ரெயில்வே கேட்டை கடந்து செல்கின்றன. ஆலக்குடியை சேர்ந்த விவசாயிகளுக்கு ரெயில்வே கேட்டை சுற்றி ஏராளமான விளை நிலங்கள் உள்ளன. விவசாயிகள் டிராக்டர், அறுவடை எந்திரங்கள் உள்ளிடவற்றை கொண்டு செல்ல முக்கிய வழியாக ரெயில்வே கேட் சாலை உள்ளது. இதை தவிர வேறு பாதைகள் கிடையாது. இப்பகுதி அருகே ஆலக்குடி ஊர் பொது குளமான பெரிய குளம் உள்ளது.

கல்லணைக்கால்வாயை நீர் ஆதாரமாக கொண்டுள்ளது இக்குளம். மழைபெய்தால் நாலாபுறத்தில் இருந்தும் தண்ணீர் இக்குளத்துக்கு வந்து சேரும். சாதாரண மழைக்கே இக்குளம் நிரம்பி ஆலக்குடி ரெயில்வே கேட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கும். இதைப்போல ரெயில்வே கேட்டுக்கு தெற்கு பகுதியில் சக்கர வாய்க்கால் உள்ளது. இதன் மூலம் ஏராளமான விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது ரெயில்வே கேட் அருகே 25 அடி ஆழத்தில் ரெயில்வே கீழ்பாலம் அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பாலம் அமைக்கப்பட்டால் மழைக்காலங்களில் குளம் மற்றும் வாய்க்கால் நீர் அனைத்தும் பாலத்தின் அடியில் தேங்கி போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படும்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இப்பணியை மேற்கொள்ள வந்த அதிகாரிகளிடம் இது குறித்து முறையிட்டோம். அப்போது அதிகாரிகள் அமைக்கப்பட உள்ள ரெயில்வே கீழ்பாலத்தில் மழை நீர் தேங்கினால் ஆலக்குடி ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக மோட்டார் வைத்து நீரை வெளியேற்றி கொள்ளலாம் என தெரிவித்தனர். இந்த பகுதியில் ரெயில்வே கீழ்பாலம் அமைத்தால் விவசாயம் மற்றும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும். எனவே தற்போது விவசாயிகள் ஒன்று திரண்டுள்ளோம். ரெயில்வே கீழ்பாலம் அமைப்பதற்கு பதில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story