கெங்கவல்லி அருகே பெண் எரித்துக்கொலையா? கணவரிடம் போலீசார் விசாரணை


கெங்கவல்லி அருகே பெண் எரித்துக்கொலையா? கணவரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 24 July 2019 4:15 AM IST (Updated: 24 July 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

கெங்கவல்லி அருகே பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? என அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கெங்கவல்லி,

கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் ஊராட்சி 6-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 50), டிரைவர். இவருடைய மனைவி சங்கீதா (37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சங்கீதா வீட்டுக்குள் படுத்து தூங்கினார். அவரது கணவரும், குழந்தைகளும் வீட்டுக்கு வெளியே தூங்கினார்கள்.

அப்போது அதிகாலை நேரத்தில் வீட்டுக்குள் இருந்து பொருட்கள் தீப்பிடித்து எரிவது போன்று வாசனை வந்துள்ளது. இதனால் வெளியே படுத்து இருந்த துரைசாமி மற்றும் அவரது குழந்தைகள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சங்கீதா தீயில் உடல் கருகி பிணமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

எரித்துக்கொலையா?

அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது துரைசாமி கூறுகையில், நானும், குழந்தைகளும் வீட்டின் வெளியே தூங்கி கொண்டு இருந்தோம். வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த சங்கீதா தீடீரென்று தீவைத்து கொண்டார் என்று கூறினார்.

எனினும் போலீசார் சங்கீதாவை தீ வைத்து எரித்துக்கொன்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டால், அதற்கு என்ன காரணம்? எனவும் விசாரணை நடத்தப்படுகிறது. தொடர்ந்து போலீசார் இறந்த சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரிய வரும் எனவும், அவரது கணவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story