‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் புதுப்பொலிவு பெறும் திருச்சி காந்தி மார்க்கெட்


‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் புதுப்பொலிவு பெறும் திருச்சி காந்தி மார்க்கெட்
x
தினத்தந்தி 24 July 2019 4:15 AM IST (Updated: 24 July 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் திருச்சி காந்தி மார்க்கெட் புதுப்பொலிவு பெறப்போகிறது. வருவாயை பெருக்க அங்கு பல அடுக்கு வணிக வளாகமும் கட்டப்படுகிறது.

திருச்சி,

மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் திருச்சி நகரில் ஐந்தாண்டுகளில் ரூ.1000 கோடியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளன. ஆண்டுக்கு ரூ.200 கோடி என்ற அளவில் நிதி பெறப்பட்டு பணிகள் நடைபெறும். முதல் கட்டமாக மலைக்கோட்டையை மையமாக வைத்து சுமார் 7 கி.மீ சுற்றளவில் வெளிநாடுகளுக்கு நிகரான நடைபாதையுடன் கூடிய பளிச்சிடும் சாலைகள், 24 மணி நேர குடிநீர் வசதி, சத்திரம் பஸ் நிலையத்தை நவீன வசதியுடன் மேம்படுத்துதல், மலைக்கோட்டை தெப்பக்குளம் பகுதியில் பூங்கா அமைத்து வண்ண ஒளியுடன் நீரூற்று அமைத்தல், மலைக்கோட்டையை மின் விளக்குகளால் ஒளிரச்செய்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கப்பட்டு விட்டன.

இது தவிர தில்லைநகரில் ரூ.15 கோடியில் வணிக வளாகம், ரூ.17 கோடியில் உய்ய கொண்டான் வாய்க்காலை அழகுபடுத்தும் பணி, ரூ.50 கோடியில் அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை உரமாக மாற்றி அந்த இடத்தில் பூங்கா அமைக்கும் பணி போன்றவையும் நடந்து வருகின்றன. சத்திரம் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்துவதற்கு தனித்தனியாக வழித்தடங்கள் மற்றும் மூன்றடுக்கு வாகனங்கள் நிறுத்தும் மையம் ஆகியவை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

3 ஆயிரம் கடைகள்

இதன் தொடர்ச்சியாக ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் திருச்சி காந்தி மார்க்கெட்டை புதுப்பொலிவுடன் மாற்றுவதற்கான நடவடிக்கையும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி நகரின் மையப்பகுதியில் காந்தி மார்க்கெட் அமைந்து உள்ளது. இங்கு காய்கறிகள் மற்றும் பழங்கள், மளிகை பொருட்கள் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் விற்பனை செய்யும் சில்லறை, மொத்த வியாபார கடைகள் உள்ளன. திருச்சி நகரம், மாவட்டத்தின் மற்ற பகுதிகள் மட்டும் இன்றி தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்பட சுற்றியுள்ள மாவட்ட விளைபொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் மண்டிகள் மற்றும் வெல்லமண்டி, வெங்காய மண்டிகளும் இதன் அருகிலேயே அமைந்து உள்ளன.

காந்திமார்க்கெட்டில் சுமார் 3 ஆயிரம் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் பயன் அடைந்து வருகிறார்கள். தினமும் பல கோடி ரூபாய் பணப்புழக்கம் நடந்து வரும் காந்தி மார்க்கெட்டின் மூலம் மாநகராட்சிக்கும் நாள்தோறும் கணிசமான வருமானம் கிடைத்து வருகிறது.

காந்தி அடிக்கல் நாட்டியது

மேலும் திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு என்று ஒரு தனி வரலாறு உள்ளது. காந்தி மார்க்கெட் திடீரென உருவாக்கப்பட்ட ஒரு வர்த்தக சந்தை அல்ல. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே அதாவது கடந்த 1940-ம் ஆண்டே அமைக்கப்பட்டதாகும். தேசத்தந்தை மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டு அப்போது இருந்த திருச்சி நகராட்சியால் உருவாக்கப்பட்டதாகும். காந்தி அடிக்கல் நாட்டியதால் தான் இதற்கு காந்தி மார்க்கெட் என்ற பெயர் வந்தது. அந்த வகையில் காந்தி மார்க்கெட் திருச்சி நகரில் ஒரு வரலாற்று சின்னமாகவும் விளங்கி வருகிறது. 79 ஆண்டுகளுக்கு முன் காந்திமார்க்கெட் அமைக்கப்பட்டபோது திருச்சி நகரின் மக்கள் தொகை சுமார் ஒரு லட்சம். ஆனால் தற்போது மக்கள் தொகை சுமார் 10 லட்சமாக உள்ளது. எனவே மக்கள் தொகை பெருக்கம் மற்றும் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு காந்தி மார்க்கெட் மேம்படுத்தப்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும்.

இட நெருக்கடி, முறையற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள கடைகள், சுகாதார கேடு போன்றவற்றினால் காந்தி மார்க்கெட் பகுதியில் நாள்தோறும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை முறைப்படுத்தி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காந்தி மார்க்கெட்டை புதுப்பொலிவுடன் மாற்றுவதற்கு திருச்சி மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

புதுப்பொலிவு

இதற்காக காந்தி மார்க்கெட்டில் பல அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இந்த வணிக வளாகத்தின் தரைத்தளம் காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் சில்லறை கடைகளுக்கு ஒதுக்கப்படும். முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் உள்ளிட்ட மற்ற தளங்கள் அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும். வாகனங்கள் நிறுத்துவதற்கும் தனியாக இடம் ஒதுக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது ‘காந்திமார்க்கெட்டை பொறுத்தவரை தற்போது இட நெருக்கடியால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே அதனை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியின் மூலம் நவீனப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் அங்கு பல அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்பட இருக்கிறது. இதன் மூலம் மாநகராட்சியின் வருவாய் பெருகுவதோடு, சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். போக்குவரத்து நெருக்கடி இன்றி, சுகாதாரமான முறையில் காந்தி மார்க்கெட் புதுப்பொலிவுடன் மாற்றப்படும். இதற்கான திட்டத்தை தயாரித்து தருவதற்காக ஒரு தனியார் நிறுவனம் ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தினர் ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை தருவார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மாநில அரசின் ஒப்புதலுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். காந்திமார்க்கெட்டை புனரமைப்பு செய்வது கள்ளிக்குடியில் அமைக்கப்பட்டுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான மத்திய வணிக வளாகத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. மொத்த வியாபார கடைகள் அனைத்தும் அந்த வளாகத்துக்கு மாற்றம் செய்யப்படும்’ என்றார்.

Next Story