ஆளில்லா ரெயில்வே கேட்டை மூட எதிர்ப்பு: விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா


ஆளில்லா ரெயில்வே கேட்டை மூட எதிர்ப்பு: விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 24 July 2019 4:49 AM IST (Updated: 24 July 2019 4:49 AM IST)
t-max-icont-min-icon

ஆளில்லா ரெயில்வே கேட்டை மூட எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

மங்கலம்பேட்டை அருகே உள்ள இலங்கியனூர்-பிஞ்சனூர் இடையே சேலம்-விருத்தாசலம் ரெயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளம் வழியாக சேலம் மற்றும் பெங்களூரு பயணிகள் ரெயில்கள், சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி சரக்கு ரெயில்களும் இயக்கப்படுகிறது. இலங்கியனூர் மற்றும் பிஞ்சனூர் இடையே பல ஆண்டுகளாக ஆளில்லா ரெயில்வே கேட் செயல்பாட்டில் இருந்தது.

இந்த ரெயில்வே கேட் வழியாக எடச்சித்தூர், வலசை, பரூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள். மேலும் தங்கள் நிலத்தில் விளையும் விளை பொருட்களையும் விவசாயிகள் இந்த வழியாகத்தான் வாகனங்களில் கொண்டு செல்கிறார்கள். இந்த நிலையில் ஆளில்லா ரெயில்வே கேட்டின் அருகில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுவதற்காக சமீபத்தில் ஊழியர்கள், ஆளில்லா ரெயில்வே கேட்ைட மூட வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில்வே கேட் மூடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் பங்கேற்று கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக இலக்கியனூர், பிஞ்சனூர், எடச்சித்தூர், வலசை, பரூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்தனர். அவர்கள் திடீரென தாலுகா அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி சிலரை மட்டும் கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர். அப்போது கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நல்லூர்-மங்கலம்பேட்டை இணைப்பு சாலை என்பதால் அருகில் உள்ள கிராம மக்கள், ஆளில்லா ரெயில்வே கேட் வழியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரெயில்வே கேட்டை மூடினால் நல்லூர்-இலங்கியனூர் மணிமுக்தாற்றில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலம் பயன்பாடின்றி காட்சிப்பொருளாகி விடும். இந்த பாலம் கட்டப்பட்டதால்தான் இப்பகுதி வழியாக வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. சுரங்கப்பாதை வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாது.

எனவே ஆளில்லா ரெயில்வே கேட்டை மூடும் திட்டத்தை கைவிட்டு விட்டு, அதில் ரெயில்வே ஊழியர் ஒருவரை பணியில் அமர்த்தி ரெயில்வே கேட்ைட திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அன்புசெல்வன், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story