மீன்பிடி படகுகள் பதிவு குறித்து அதிகாரிகள் ஆய்வு


மீன்பிடி படகுகள் பதிவு குறித்து அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 24 July 2019 4:52 AM IST (Updated: 24 July 2019 4:52 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி படகுகள் பதிவு மற்றும் இதர விவரங்கள் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கடலூர் முதுநகர்,

தமிழகம் முழுவதும் நேற்று 13 மாவட்டங்களில் சிறிய ரக மீன்பிடி படகுகள் பதிவு உள்ளி்ட்ட இதர விவரங்கள் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் மீன்வளத்துறை சென்னை இணை இயக்குனர் இளங்கோ தலைமையில், கடலூர் உதவி இயக்குனர் ரம்யா உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டோர் குழுக்களாக பிரிந்து கடலோர மீனவ கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மோட்டார் பொருத்தப்பட்ட மற்றும் மோட்டார் பொருத்தப்படாத சிறிய ரக மீன்பிடி படகுகளின் பதிவு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தனர்.

கடலூர் துறைமுகம், சோனங்குப்பம், அக்கரைகோரி, சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், மாலுமியார் பேட்டை, ராசாப்பேட்டை, சித்திரப்பேட்டை, சாமியார் பேட்டை, அன்னங்கோவில் உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய மீன்பிடி படகுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதிகாரிகளின் ஆய்வு காரணமாக நேற்று ஒருநாள் மட்டும் மாவட்டம் முழுவதும் சிறிய ரக மீன்பிடி படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இ்ந்த ஆய்வு குறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, பதிவு செய்யப்படாத படகுகளுக்கு பதிவெண் வழங்குவது, பதிவு செய்யப்பட்ட படகுகளில் பதிவு எண்ணை தெளிவாக எழுத சொல்வது, படகில் மீன்பிடிக்க செல்லும் போது கொண்டு செல்லக்கூடிய முதல்உதவி பெட்டி, பாதுகாப்பு உபரகணங்கள் மற்றும் உடை, வயர்லெஸ் கருவி, அடையாள அட்டை, மீன்பிடி உரிமம் ஆகியவை உள்ளதா? என்பதை ஆய்வு செய்தோம். மேலும், தடை செய்யப்பட்ட மீன்பிடி வலையை பயன்படுத்த கூடாது, தூண்டில் என்னும் செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளி்ட்ட பல்வேறு அறிவுரைகளை மீனவர்களுக்கு வழங்கி இருக்கிறோம் என்றார்.


Next Story