கொட்டாரம் பகுதி கால்வாயில் தண்ணீர் திறந்த பிறகு தூர்வாரும் பணி விவசாயிகள் எதிர்ப்பு


கொட்டாரம் பகுதி கால்வாயில் தண்ணீர் திறந்த பிறகு தூர்வாரும் பணி விவசாயிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 25 July 2019 4:15 AM IST (Updated: 24 July 2019 8:33 PM IST)
t-max-icont-min-icon

கொட்டாரம் பகுதியில் கால்வாயில் தண்ணீர் திறந்த பிறகு தூர்வாரும் பணி நடைபெற்று வருவதால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி,

நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாய் மூலம் குமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த கால்வாய் மூலம் வரும் தண்ணீரை நம்பி விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். பேச்சிப்பாறையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாய் வழியாக பாசனத்திற்கு செல்கிறது.

ஆனால், இந்த தண்ணீர் கன்னியாகுமரி அருகே உள்ள குமரி சால்குளம் அமைந்துள்ள கடைவரம்பு பகுதிக்கு இன்னும் சென்றடைய வில்லை. இதனால், அப்பகுதி விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

வழக்கமாக கோடை காலத்தில் வறண்டு கிடக்கும் போது, இந்த கால்வாயில் தூர்வாரும் பணி நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு சரியான முறையில் தூர்வாரப்படவில்லை. இதனால், கால்வாயில் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், தண்ணீர் கடைவரம்பு பகுதிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

அதே சமயத்தில் கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் கொட்டாரம் அருகே மேட்டுக்கால்வாய் வழியாக நெல்லை மாவட்டம் கருங்குளத்தில் உள்ள குடிநீர் கிணற்றுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கிணற்றில் இருந்து குழாய்கள் மூலம் கன்னியாகுமரி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது, அந்த கிணற்றுக்கு செல்ல கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால், கால்வாய் பகுதியில் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் தண்ணீர் விரைந்து செல்வதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. முன்கூட்டியே தூர்வாராமல் தண்ணீர் திறந்த பிறகு பணி நடைபெறுவது முழு பலனை தராது என்று அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும், இந்த பணிக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Next Story