மண்டையூர், நாகுடியில் விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


மண்டையூர், நாகுடியில் விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 July 2019 4:30 AM IST (Updated: 25 July 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

மண்டையூர், நாகுடியில் விலையில்லா மடிக் கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவூர்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் அருகே உள்ள மண்டையூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 2017-18-ம் ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்த 62 மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினி இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் 2018-19-ம் ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்த மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். இதனால் எங்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க வேண்டும் என்று மாவட்டம் முழுவதும் உள்ள 2017-18-ம் ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து ஒரு பகுதியாக மண்டையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 62 பேரும் தங்களுக்கு விலையில்லா மடிக்கணினி மற்றும் நிலுவையில் இருக்கும் கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை மண்டையூர் முருகன் கோவில் அருகே திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து மாணவர்கள் மண்டையூர் அரசுப்பள்ளிக்கு சென்று பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர் எட்வர்டு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மடிக்கணினி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அறந்தாங்கி அருகே நாகுடி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு அரசு வழங்கக்கூடிய விலையில்லா மடிக்கணினியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறி தமிழக அரசை கண்டித்து நாகுடி அரசு பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மடிக்கணினி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாணவர்களை ஒன்று திரட்டி மிக பெரிய போராட்டம் நடத்தப்படும் என கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவருக்கும் விரைவில் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story