மாவட்டத்தில் இதுவரை 2¼ லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது கலெக்டர் சிவராசு தகவல்


மாவட்டத்தில் இதுவரை 2¼ லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது கலெக்டர் சிவராசு தகவல்
x
தினத்தந்தி 25 July 2019 4:30 AM IST (Updated: 25 July 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 32 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது என்று சிறப்பு மனு நீதி நிறைவு நாள் முகாமில் கலெக்டர் சிவராசு கூறினார்.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம், வளநாடு பகுதி, வெள்ளையக்கோன்பட்டி கிராமத்தில், சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமில் 829 பயனாளிகளுக்கு ரூ.85 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சிவராசு வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மழை நீர் சேகரிப்பு

மருங்காபுரி வட்டம் விவசாயத்தை சார்ந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியில் மானாவாரி பயிர்கள் பயிர்செய்யப்படுகின்றன. பொதுமக்கள் நீர் ஆதாரத்தை மேம்படுத்துவதற்கு ஒவ்வொரு வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைத்து மழைநீரை பூமிக்கடியில் செலுத்தி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளில் 500 ஊரணிகள் மேம்படுத்தப்படவுள்ளது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் 30 சென்ட் நிலத்தில் பண்ணைக் குட்டை அமைக்க போதுமான இடமாகும். பண்ணைக் குட்டை அமைப்பதன் மூலம் மழைநீர் தேங்கி நீலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

தலா ரூ.6 ஆயிரம்

இப்பகுதியில் குடிநீர் பிரச்சினை இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். குடிநீர் சீராக வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்படும். பாரத பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் ஆண்டுக்கு ரூ. 6000 பெறுவதற்கு விண்ணப்பம் அளித்தால் தகுதியின் அடிப்படையில் இத்திட்டத்தில் சேர்க்கப்படும். இதுவரை நமது மாவட்டத்தில் முதல் தவணையாக 1 லட்சத்து 42 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணையாக 90 ஆயிரம் விவசாயிகளுக்கு என இதுவரை மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை தொடர்ந்து இந்த பகுதிக்கு வழங்கப்படும். பாரத பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விடுபட்ட விவசாயிகள் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

244 மனுக்கள்

இந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 244 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 218 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. நிறைவு நாள் முகாமில் 123 மனுக்கள் பெறப்பட்டது. மனுநீதி நிறைவு நாள் முகாமில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, கால் நடைத்துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுகாதாரத்துறை ஆகிய துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கும் சிறு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. 

Next Story