திண்டிவனம் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
திண்டிவனம் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்,
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் ஷேக் சலீம்பாட்ஷா. இவரது மனைவி தில்ஷாத்பானு(வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஷேக்சலீம்பாட்ஷா துபாயில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
தில்ஷாத்பானு தனது குழந்தைகளுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அப்போது அவருக்கு அதேபகுதியை சேர்ந்த திருமணமாகாத விவேக்(29) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. அதைத்தொடர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
இவர்களது கள்ளக்காதல் விவகாரம் அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. இதனால் மனமுடைந்த கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியே செல்ல முடிவு செய்தனர். அதன்படி இருவரும் கடந்த 21-ந்தேதி தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். இதையறிந்த அவருடைய தாய், குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற தில்ஷாத் பானுவை கண்டுபிடித்து தரக்கோரி நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான கள்ளக்காதல் ஜோடியை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் இருந்த மரத்தடியில் நேற்று காலை 11 மணியளவில் 35 வயது மதிக்கத்தக்க ஒருபெண்ணும், 30 வயது வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரும் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடப்பதாக ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மயங்கி கிடந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் இருவரும் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே விஷம் குடித்த இருவரும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண் ஷேக்சலீம்பாட்ஷாவின் மனைவி தில்ஷாத்பானு(வயது 35) என்பதும், அந்த வாலிபர் விவேக்(29) என்பதும் தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், இவர்களது கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கும், உறவினர்களுக்கும் தெரியவந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்ததும், இந்தநிலையில் போலீசார் அவர்களை தேடுவதை அறிந்ததால் இருவரும் நேற்று காலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story