நடுவீரப்பட்டு அருகே ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் எதிர்ப்பு
நடுவீரப்பட்டு அருகே ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம்,
ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில் கடலூர் தாலுகா நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையத்தில் சுமார் 61 ஏக்கர் பரப்பளவில் உள்ள பாளையம் ஏரியை கிராம நிர்வாக அலுவலர் பிரதாப் மற்றும் ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.
இதில் 41 விவசாயிகள் சேர்ந்து ஏரியை முழுமையாக ஆக்கிரமித்து வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்த்துறையினர், மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். மேலும் ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றிக் கொள்ளுமாறு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளவில்லை.
இதனால் கடலூர் தாசில்தார் செல்வகுமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் லலிதா, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரதாப், ஸ்ரீராம், நாகராஜ் மற்றும் பொதுப் பணித்துறை ஊழியர்கள் நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பாளையம் ஏரிக்கு சென்றனர். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை சார்பில் ஒரு பொக்லைன் எந்திரம் மட்டுமே வரவழைக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்த வருவாய்த்துறை அதிகாரிகள், ஒரு பொக்லைன் எந்திரம் மூலம் எவ்வாறு ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற முடியும். அதனால் கூடுதல் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்க ஏற்பாடு செய்யுமாறு பொதுப்பணித்துறை ஊழியர்களிடம் கூறினர். ஆனால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இதற்கிடையே அங்கு வந்த ஆக்கிரமிப்பாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்கள், நாங்கள் சாகுபடி செய்த நெல், கரும்பு, வாழை போன்றவை அறுவடை செய்யும் தருவாயில் உள்ளது. அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றனர்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை சார்பில் வழங்கப்பட்ட நோட்டீசில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததால், எங்களுக்கு அந்த நோட்டீஸ் குறித்து எதுவும் தெரியவில்லை என்றனர்.
ஆனால் ஆக்கிரமிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள இனி கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என்று திட்டவட்டமாக கூறினர். இதனால் ஆக்கிரமிப்பாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் தாசில்தார் செல்வகுமார், சப்-கலெக்டர் சரயுவை செல்போனில் தொடர்பு கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தார். அதற்கு சப்-கலெக்டர் சரயு, அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதிக்குள் அனைத்து பயிர்களையும் அறுவடை செய்திட வேண்டும். காலதாமதப்படுத்தினால் எந்தவித கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளாமல் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும். இதுதொடர்பாக ஆக்கிரமிப்பாளர்கள் 41 பேரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அனுமதி அளிக்குமாறு தெரிவித்தார்.
அதன்பேரில் வருவாய்த் துறையினர் 41 பேரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு கூடுதல் கால அவகாசம் அளித்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் பாபு, சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஸ்வநாதன், ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story