திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு 3 கிலோ போதை பொருள் கடத்தல்; 2 பேர் கைது


திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு 3 கிலோ போதை பொருள் கடத்தல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 July 2019 3:15 AM IST (Updated: 26 July 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு 3 கிலோ போதை பொருளை கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,

திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு செங்குன்றம் வழியாக ரூ.3 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் ரவளி பிரியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து புழல் உதவி கமிஷனர் ரவி உத்தரவின்பேரில் செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பலராமன், தலைமை காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, நல்லுசாமி ஆகியோர் செங்குன்றம் வடகரை ஜங்ஷனில் நேற்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி சைகை காண்பித்தனர். ஆனால் அந்த மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் நிற்காமல் வேகமாக சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த மோட்டார்சைக்கிளை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர்.

மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், செங்குன்றத்தை அடுத்த தீர்த்தங்கரையாம்பட்டு திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த ஷகில் அகமது(வயது 22), சென்னையை அடுத்த புழல் காவாங்கரை குரு சாந்தி நகரை சேர்ந்த ஷாஜா ரூதின்(20) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய சோதனையில், 3 கிலோ மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் கடத்தி செல்வது தெரிந்தது. அதை போலீசார் சோதனை நடத்தியபோது, அது ஹெராயின் போதை பொருள் இல்லை என்பதும், உப்புக்கரைசல் கொண்ட ஒரு வகையான போதை பொருள் என கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை திருவள்ளூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்த சசி என்பவரிடம் ஒரிஜினல் ஹெராயின் போதை பொருள் என ரூ.3 கோடிக்கு பேரம் பேசி நூதன முறையில் மோசடியில் ஈடுபட முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து ஷகில் அகமது, ஷாஜா ரூதின் இருவரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து சுமார் 3 கிலோ மதிப்பிலான உப்புக்கரைசல் போன்ற போதை பொருள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விஜயகுமார், சசி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story