பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அன்பழகன் தகவல்


பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 25 July 2019 11:00 PM GMT (Updated: 25 July 2019 8:34 PM GMT)

பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூறினார்.

கரூர்,

தமிழக முதல்-அமைச்சர் 2019-20-ம் நிதியாண்டில் பசுந்தீவன பற்றாக்குறையைப் போக்குவதற்காக ரூ.25 கோடி நிதி இலக்கீட்டில் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக மாநில பசுந்தீவன வளர்ப்புத்திட்டம் செயல்படுத்்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியை பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது மிகவும் இன்றியமையாதது. கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 65-70 விழுக்காடு, தீவன மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது.

ஆகவே, தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப் படுத்தும் வகையிலும் தமிழக அரசு கடந்த 8 ஆண்டுகளாக மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய கீழ்க்கண்ட தீவனப் பயிர் சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

இறவையில் கம்பு நேப்பியர் மற்றும் பசுந்தீவனம்் வளர்ப்பதற்கு 120 ஏக்கர் பரப்பளவில் தலா 0.25 ஏக்கரில் சாகுபடி செய்ய இலவசமாக விதைகள் வழங்கப்பட உள்ளது (பயனாளிகளுக்கு அதிகபட்சம் 1 ஏக்கர்). மானாவாரியில் தீவனப் பற்றாக்குறையைப் போக்கும் பொருட்டு, 800 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகளுக்கு சோளம் மற்றும் தட்டைப்பயறு வகைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் 0.25 ஏக்கரில் பயிரிடுவதற்கு 3 கிலோ சோளமும், 1 கிலோ தட்டப்பயறும் வழங்கப்படும். (பயனாளிகளுக்கு அதிகபட்சம் 2 ஏக்கர்)

மேற்காணும் திட்டங்களின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி பயன்பெற விருப்பமுள்ள திட்டங்களை குறிப்பிட்டு எழுத்து மூலமாக விண்ணப்பம் அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எல்லா திட்ட இனங்களிலும் 30 சதவீதத்திற்கும் மேல் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இத்திட்டங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரியப்படுத்தப்படுகிறது. எனவே, மேற்கண்ட திட்டத்தின் மூலம் பயன்பெறவிரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story