கிருஷ்ணகிரி பகுதியில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டதா? கைதானவர்களிடம் போலீசார் விசாரணை


கிருஷ்ணகிரி பகுதியில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டதா? கைதானவர்களிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 July 2019 4:30 AM IST (Updated: 26 July 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலம் குப்பத்தில் ரூ.2¾ கோடி கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கைதானவர்களிடம் கிருஷ்ணகிரி பகுதியில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டதா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள மருதேப்பள்ளியை சேர்ந்த கமலநாதன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 28), பாலேப்பள்ளி ஊராட்சி எலத்தகிரியைசேர்ந்த குபேந்திரன் (50), ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த சுரேஷ் (31), சுரேஷ் குமார் (23), ஹேமந்த்குமார் (26), குப்பம் அருகே உள்ள சாமகுட்டப்பள்ளியை சேர்ந்த ஆனந்தகுமார் (33) ஆகிய 6 பேரை ராமகுப்பம் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 76 லட்சத்து 22 ஆயிரம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை 500, 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் ஆகும். அதே போல அவர்களிடம் செல்லாத 1000 ரூபாய் நோட்டுகளும் கத்தை, கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழ்நாட்டில் புழக்கம்

மேலும் கள்ள நோட்டுகளை ஸ்கேன், பிரிண்ட் செய்ய பயன்படுத்திய எந்திரங்கள், கம்ப்யூட்டர்கள், ஸ்கேனர்கள், மடிக்கணினிகள், உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் கள்ள நோட்டுகளை வணிக வளாகங்கள், கடைகள், காய்கறி மார்க்கெட்டுகளில் கொடுத்து மாற்றியது தெரிய வந்தது. மேலும் ரூ.1 லட்சம் நல்ல நோட்டு கொடுத்தால், ரூ.2 லட்சம் அளவிற்கு கள்ள நோட்டுகளை கொடுத்ததும் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளை சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெங்கடஅப்பல் நாயுடு பார்வையிட்டார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த நோட்டுகள் சித்தூர் மாவட்டத்தில் மாற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் பெருமளவில் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்றார்.

கிருஷ்ணகிரியில் விசாரணை

கிருஷ்ணகிரி அருகில் ஆந்திர மாநிலம் குப்பம் அமைந்துள்ளது. மேலும் கைதானவர்களில் 2 பேர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கிருஷ்ணகிரி பகுதியில் அதிக அளவில் 2000, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்டிருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் கருதுகிறார்கள். மேலும் கைதான கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே ஆந்திர மாநில போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். கைதான குபேந்திரன், மணிகண்டன் கொடுத்த தகவலின் பேரில் சில இடங்களுக்கு சென்று விசாரணை நடத்த உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.


Next Story