தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவை எதிர்த்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவை எதிர்த்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 July 2019 4:30 AM IST (Updated: 26 July 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவை எதிர்த்து நாமக்கல்லில் நேற்று டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாமக்கல்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவை எதிர்த்து நாடு முழுவதும் டாக்டர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் இந்திய மருத்துவ சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இந்திய மருத்துவ சங்கத்தின் நாமக்கல் கிளை சார்பாக தேசிய மருத்துவ ஆணைய சட்ட முன்வடிவை திரும்ப பெற வலியுறுத்தி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் நாமக்கல் கிளை தலைவர் டாக்டர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜா, துணை தலைவர் வெங்கடேஷ்குமார், முன்னாள் தலைவர் ஏ.பி.சுப்பிரமணியம், டாக்டர்கள் நடேசன், ரவிசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தரத்தை குறைக்க முயற்சி

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, இந்திய மருத்துவ சங்கத்தின் நாமக்கல் கிளை தலைவர் ரங்கநாதன் பேசும்போது, ஜனநாயக அமைப்பான இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு, மருத்துவர்கள் அல்லாத உறுப்பினர்களை கொண்ட தேசிய மருத்துவ ஆணையம் என்ற புதிய அமைப்பை கொண்டு வர மத்திய அரசு சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளது.

இதனால் மருத்துவ கல்வி தரம் பாதிக்கப்படும். இந்த அமைப்பு மூலம் தனியார் மருத்துவ கல்லூரிகளே தங்களுடைய கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

மருத்துவர் அல்லாதவர்களை கொண்டு மருத்துவ கவுன்சில் அமைத்து இணைப்பு கல்வி என்ற பெயரில் மருத்துவ கல்வி தரத்தை குறைக்க முயற்சி எடுத்து வருகிறது. இந்த சட்ட முன்வடிவை இந்திய மருத்துவ சங்கம் எதிர்க்கிறது என்றார். 

Next Story