தேசியவாத காங்கிரஸ் மும்பை தலைவர் சச்சின் அஹிர் சிவசேனாவில் இணைந்தார்


தேசியவாத காங்கிரஸ் மும்பை தலைவர் சச்சின் அஹிர் சிவசேனாவில் இணைந்தார்
x
தினத்தந்தி 25 July 2019 10:24 PM GMT (Updated: 25 July 2019 10:24 PM GMT)

தேசியவாத காங்கிரஸ் மும்பை தலைவர் சச்சின் அஹிர் சிவசேனாவில் இணைந்து உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சிவசேனா சார்பில் ஒர்லி தொகுதியில் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடைபெற்றால் பால் தாக்கரே குடும்பத்தில் தேர்தலில் போட்டியிடும் முதல் நபர் ஆதித்ய தாக்கரே ஆவார்.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் மும்பை தலைவரும் முன்னாள் மாநில மந்திரியுமான சச்சின் அஹிர் சிவசேனாவில் இணைந்து உள்ளார். இவர் நேற்று உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே முன்னிலையில் மாதோஸ்ரீ இல்லத்தில் வைத்து சிவசேனாவில் இணைந்தார்.

சச்சின் அஹிர் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் அதில் பணியாற்றி வந்தவர் ஆவார். சரத்பவாரின் நம்பிக்கைக்குரிய ஒருவராக விளங்கி வந்த இவர் பிரபல நிழல்உலக தாதா அருண்காவ்லியின் உறவினர். இவர் 1999 முதல் 2009-ம் ஆண்டு வரை சிவ்ரி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை ஒர்லி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். 2014-ம் ஆண்டு ஒர்லி தொகுதியில் சிவசேனா வேட்பாளர் சுனில் ஷிண்டேவிடம் தோல்வி அடைந்தார்.

இந்தநிலையில் சச்சின் அஹிர் சிவசேனாவில் இணைந்தது குறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘‘நெறி தவறி சிவசேனாவை வளர்க்க நான் விரும்பியதில்லை. அடுத்த கட்சிகளை உடைப்பது சிவசேனாவின் கொள்கை அல்ல. மக்களின் இதயங்களை வென்றே அரசியல் செய்ய விரும்புகிறோம்.

விருப்பத்துடன், மகிழ்ச்சியுடன் சச்சின் அஹிர் எங்கள் கட்சியில் இணைந்துள்ளார். இந்த முடிவுக்காக அவர் வருத்தப்படமாட்டார் என உறுதி அளிக்கிறேன்’’ என்றார்.

இதையடுத்து சச்சின் அஹிர் பேசியதாவது:-

சரத்பவார் என் மனதில் எப்போதும் இருப்பார். எனினும் இனிமேல் சிவசேனாவுக்காக உழைக்க ஆதித்ய தாக்கரே, உத்தவ் தாக்கரேவும் பலமாக எனது உடலில் இருப்பார்கள். தேசியவாத காங்கிரசுடன் எந்த மோதலும் இல்லை. எனினும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அரசியலில் முடிவுகள் எடுப்பது தவிர்க்க முடியாதது ஆகிறது.

மாநிலத்தில் பல மாநகராட்சிகள் சிவசேனா வசம் உள்ளது. எனவே நகர்புற மேம்பாட்டு துறை மந்திரியாக இருந்த போது எனக்கு கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தி கொள்ள முடியும். நகரங்களின் வளர்ச்சிக்காக பணியாற்றவே இந்த முடிவை எடுத்து உள்ளேன். நான் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிவசேனா முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெவ்வேறு கட்சியில் இருந்த போதும் எங்கள் நோக்கமும், எண்ணமும் நகரங்களை மேம்படுத்துவதில் தான் இருந்தது என ஆதித்ய தாக்கரே கூறினார்.

சச்சின் அஹிர் சிவசேனாவில் சேர்ந்தது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், ‘‘சட்டசபை தேர்தலில் சொந்த பலத்தில் போட்டியிட தைரியம் இல்லாதவர்கள் கட்சியை விட்டு செல்கின்றனர். அவர் சிவசேனாவில் இணைந்ததால் எங்களின் தேர்தல் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படபோவதில்லை’’ என்றார்.

ஆதித்ய தாக்கரேயை ஒர்லி தொகுதியில் நிறுத்த சிவசேனா திட்டமிட்டுள்ளது. எனவே அங்கு பலமாக உள்ள சச்சின் அஹிரை சிவசேனா தங்கள் பக்கம் இழுத்ததாக தெரிகிறது. மேலும் சச்சின் அஹிர் வரும் சட்டசபை தேர்தலில் சிவசேனா சார்பில் பைகுல்லா தொகுதியில் போட்டியிடுவார் எனவும் கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மூத்த தலைவர் ஒருவர் சிவசேனாவில் இணைந்திருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த 2 மாதத்தில் சிவசேனாவில் சேரும் 3-வது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சச்சின் அஹிர் ஆவார்.

Next Story