கோவை-திருச்சி சாலையில் ரூ.250 கோடியில் புதிதாக கட்டப்படும் மேம்பாலத்தில், சுங்கம் பகுதியில் இறங்கு தளம்


கோவை-திருச்சி சாலையில் ரூ.250 கோடியில் புதிதாக கட்டப்படும் மேம்பாலத்தில், சுங்கம் பகுதியில் இறங்கு தளம்
x
தினத்தந்தி 25 July 2019 11:10 PM GMT (Updated: 25 July 2019 11:10 PM GMT)

கோவை-திருச்சி சாலையில் ரூ.250 கோடி செலவில் கட்டப்படும் புதிய மேம்பாலத்தில் சுங்கம் பகுதியில் இறங்கு தளம் ஒன்று அமைக்கப்படுகிறது.

கோவை,

கோவை-திருச்சி சாலையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்காக ரெயின்போ பகுதியில் இருந்து கோவை பங்கு சந்தை வரை ரூ.250 கோடியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது மேம்பால கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்படும் இந்த பாலம் 4 வழிபாதையாக அமைக்கப்படுகிறது. பாலத்தின் அகலம் 17.20 மீட்டராகவும், சுங்கம் ரவுண்டானா பகுதியில் இந்த பாலத்தின் அகலம் 19.60 மீட்டராகவும் இருக்கும்.

சுங்கம் ரவுண்டானா பகுதியில் இந்த மேம்பாலத்தில் இருந்து வாலாங்குளம் சாலையில் ஒரு இறங்கு தளம் அமைக்கப்படுகிறது. அது 8.50 மீட்டர் அகலத்தில் இரண்டு வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. இந்த இறங்கு தளத்தின் நீளம் 400 மீட்டராகும். இந்த பாலத்துக்காக மொத்தம் 111 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்படுகிறது. ஒரு தூணுக்கும் மற்றொரு தூணுக்கும் இடையே உள்ள தூரம் 25 மீட்டர் ஆகும். மேம்பாலம் இன்னும் 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட உள்ளது.

பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் இருந்து ஆத்துப்பாலம் வழியாக திருச்சி செல்லும் வாகனங்கள் இந்த பாலத்தை பயன்படுத்தலாம். அங்கிருந்து வரும் வாகனங்கள் வாலாங்குளம் பாலத்தில் இறங்கி இடதுபுறம் திரும்பி கிளாசிக் டவர் வழியாக திருச்சி சாலையை அடைந்து ரெயின்போவில் தொடங்கும் புதிய பாலம் வழியாக செல்லலாம். இதேபோல கோவை-திருச்சி சாலை வழியாக கேரளா மற்றும் பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள் புதிதாக கட்டப்படும் பாலம் வழியாக வந்து சுங்கம் ரவுண்டானாவில் இருந்து வாலாங்குளம் பைபாஸ் சாலையில் அமைக்கப்படும் இறங்கும் தளம் வழியாக வந்து உக்கடம் செல்லலாம்.

சுங்கம் ரவுண்டானாவில் புதிதாக கட்டப்படும் மேம்பாலத்தில் இருந்து வாலாங்குளம் பைபாஸ் சாலையில் இறங்குவதற்காக மட்டுமே ஒரேயொரு இறங்குதளம் அமைக்கப்படுகிறது. வாலாங்குளம் பைபாஸ் சாலை வழியாக வரும் வாகனங்கள் புதிய பாலத்தில் ஏற முடியாது. ரெயின்போவில் இருந்து புதிய பாலத்தில் செல்லும் வாகனங்கள் பங்கு சந்தை முன்பு முடிவடையும் பாலத்தில் தான் இறங்க முடியும். வேறு எங்கும் இறங்க முடியாது.

கோவை- திருச்சி சாலையில் புதிதாக கட்டப்படும் பாலத்திற்காக அந்த சாலையில் 54 மரங்கள் வெட்டப்பட உள்ளன. இதுகுறித்து ஓசை அமைப்பின் சையது கூறியதாவது:-

கோவை-திருச்சி சாலையில் புதிதாக கட்டப்படும் பாலத்திற்காக மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை துறையினர் கூறினார்கள். இது குறித்து பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்து கடைசியாக 54 மரங்கள் வெட்டப்பட உள்ளன. அதில் பெரும்பாலானவை மே பிளவர் மற்றும் தூங்கு வாகை மரங்கள் தான். அந்த மரங்களை இடமாற்றம் செய்ய முடியாது. ஒரு நாவல் மரம் இருப்பதாக கூறப்படுகிறது. அதை இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். வெட்டப்பட வேண்டிய 54 மரங்களில் சில மரங்களின் கிளைகளை மட்டும் வெட்டினால் போதும் என்று முடிவு செய்துள்ளோம். மரங்களை எந்த அளவிற்கு வெட்டாமல் பாலம் கட்ட முடியுமோ அந்த அளவிற்கு மரங்களை வெட்டுவது குறைக்கப்படும். பாலம் தொடங்கும் மற்றும் இறங்கும் இடங்களான ரெயின்போ மற்றும் பங்கு சந்தை ஆகிய இடங்களில் தான் அதிக மரங்களை வெட்ட வேண்டியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story