போத்தனூர் பகுதியில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் 120 கண்காணிப்பு கேமராக்கள் இணைப்பு போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்


போத்தனூர் பகுதியில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் 120 கண்காணிப்பு கேமராக்கள் இணைப்பு போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 July 2019 4:50 AM IST (Updated: 26 July 2019 4:50 AM IST)
t-max-icont-min-icon

கோவை போத்தனூர் பகுதியில் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் சுமித்சரண் இதனை தொடங்கி வைத்தார்.

கோவை,

கோவை நகரில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவினாசிரோடு அண்ணாசிலை சிக்னல், லட்சுமி மில் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுதவிர பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக ஆர்.எஸ்.புரத்தில் தொடங்கப்பட்டு, பீளமேடு, சாய்பாபா காலனி, காட்டூர் போலீஸ் நிலைய எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் போத்தனூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் நிகழ்ச்சி மற்றும் புணரமைக்கப்பட்ட புறக்காவல் நிலையங்களை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

போலீஸ் கமிஷனர் சுமித்சரண் கலந்துகொண்டு புறக்காவல்நிலையத்தை திறந்து வைத்து, 120 கண்காணிப்பு கேமராக்களை போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்தார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர்கள் பாலாஜி சரவணன், பெருமாள் உதவி கமிஷனர்கள் செட்ரிக் இமானுவேல், வெற்றி செல்வன், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்தநிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் சுமித் சரண் பேசும்போது கூறியதாவது:- கோவை நகரம் 25 லட்சம் மக்கள் தொகையை கொண்டது. கோவையில் 2,500 போலீசார் உள்ளனர். அவர்களால் அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரத்தினபுரி அருகே ரூ.13 லட்சம் கொள்ளையடித்த சம்பவத்தில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். போத்தனூர் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை மேற்கொண்ட போலீசாருக்கு பாராட்டுக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அரிமா மாவட்ட கவர்னர் வெங்கடசுப்பிரமணியம், மண்டல தலைவர் சீனிவாச கிரி, தலைவர் நிதிஷ்குட்டன், ஸ்ரீதர், முத்துவேல், அரிமா பிர பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
1 More update

Next Story