ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்லும் 3-வது பாதை: மஞ்சூர்-கெத்தை சாலையை சீரமைக்கும் பணி


ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்லும் 3-வது பாதை: மஞ்சூர்-கெத்தை சாலையை சீரமைக்கும் பணி
x
தினத்தந்தி 25 July 2019 11:34 PM GMT (Updated: 25 July 2019 11:34 PM GMT)

ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்லும் 3-வது பாதையான மஞ்சூர்-கெத்தை சாலையை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மஞ்சூர்,

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இங்கு தினமும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆண்டுதோறும் நிலவும் கோடை சீசனை அனுபவிக்க ஏராளமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக கோவைக்கு சாலை செல்கிறது. இதேபோல கோத்தகிரி வழியாக மற்றொரு சாலை செல்கிறது. இவை ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்லும் பிரதான சாலைகள் ஆகும். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மண் சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் நிகழந்து வருகின்றன.

குறிப்பாக மரம் முறிந்து விழுதல், மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுதல் போன்ற காரணங்களால் ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்லும் மேற்கண்ட 2 சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அப்போது அனைத்து தரப்பினரும் அவதியடைவதோடு, நீலகிரி மாவட்டத்தில் பொருளாதாரமும் பாதிக்கும் நிலை உருவாகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஊட்டியில் இருந்து மஞ்சூர், கெத்தை, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு செல்லும் சாலையை 3-வது மாற்றுப்பாதையாக மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று 3-வது மாற்றுப்பாதை திட்டம் நிறைவேற்றப்படும் என்று கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அதன்பிறகு அந்த திட்ட பணிகள் முடங்கின.

இதற்கிடையில் மஞ்சூர்-கெத்தை சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறியது. மேலும் சாலையின் இருபுறமும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்தன. இதனால் சாலையின் அகலம் குறைந்தது. குறிப்பாக ஒணிக்கண்டி முதல் வெள்ளியங்காடு வரை ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவுக்கு சாலையின் அகலம் குறைந்துவிட்டது. வாகனங்களில் ஜன்னல் ஓரங்களில் அமர்ந்து பயணிக்கும் பயணிகளின் முகங்களை முட்புதர்களின் கிளைகள் பதம் பார்க்கும் சம்பவங்கள் தினமும் நடந்தேறுகிறது. சாலையின் பெரும்பாலான இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, பெரிய அளவில் குழிகள் ஏற்பட்டுள்ளன. அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே 3-வது மாற்றுப்பாதை திட்டம் செயல்படுத்தாவிடினும், இப்போதுள்ள சாலையையாவது சீரமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்லும் 3-வது மாற்றுப்பாதை திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் மஞ்சூர் முதல் பெகும்பள்ளம் வரை சுமார் 22 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலையை சீரமைக்க ரூ.27 கோடி, பெகும்பள்ளம் முதல் வெள்ளியங்காடு வரை சுமார் 23 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலையை சீரமைக்க ரூ.22 கோடி என மொத்தம் ரூ.49 கோடி சாலை சீரமைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மஞ்சூர் முதல் வெள்ளியங்காடு வரை சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சாலையின் இருபுறமும் 6 அடி வரை அகலப்படுத்தப்பட்டு, 43 கொண்டை ஊசி வளைவுகள் விரிவுபடுத்தப்படுகின்றது. மேலும் ஆங்காங்கே உள்ள சிறு பாலங்கள் அகலப்படுத்தப்பட்டு, குறுகலான இடங்களில் தடுப்புச்சுவர் கட்டப்படுகிறது.

தற்போது கொண்டை ஊசி வளைவுகளை விரிவுபடுத்தும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சாலையின் இருபுறமும் பொக்லைன் எந்திரம் மூலம் அகலப்படுத்தப்பட்டு, ஜல்லிக்கற்கள் கொட்டும் பணி நடக்கிறது. இந்த சாலை பணி அடுத்த ஆண்டு(2020) செப்டம்பர் மாதம் நிறைவு பெறும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மஞ்சூர் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

3-வது மாற்றுப்பாதை திட்டத்தின்படி மஞ்சூர்-கெத்தை சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோவைக்கு 2.30 மணி நேரம் முதல் 3 மணி நேரத்தில் சென்று விடலாம். இதனால் எரிபொருள் செலவு மிச்சமாகும். மேலும் நேர விரயம் இருக்காது. மேலும் மஞ்சூர் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனால் வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story