தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் மாவட்ட சி.ஐ.டி.யு. மாநாட்டில் தீர்மானம்


தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் மாவட்ட சி.ஐ.டி.யு. மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 28 July 2019 4:30 AM IST (Updated: 27 July 2019 8:25 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று குமரி மாவட்ட சி.ஐ.டி.யு. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தக்கலை,

தக்கலையில் சி.ஐ.டி.யு. குமரி மாவட்ட 2–வது நாள் மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் சி.ஐ.டி.யு. மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக பிரதிநிதிகளின் விவாதம், தகுதி ஆய்வு குழுவின் அறிக்கை அளித்தல், புதிய மாவட்ட குழு தேர்வு, மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு நடந்தது.

மாநில செயலாளர் ஆறுமுக நயினார் வாழ்த்தி பேசினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலவிளை பாசி, தக்கலை வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் சுஜா ஜாஸ்மின், மாவட்ட துணை தலைவர்கள் இந்திரா வல்சகுமார், மாவட்ட துணை செயலாளர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வரவேற்பு குழு செயலாளர் ஜாண் சவுந்தர்ராஜ் நன்றி கூறினார்.


மாநாட்டில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நாட்களை 200–ஆகவும், தினக்கூலியை ரூ.400–ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும், பழங்குடியின மக்களுக்கு எதிரான வன திருத்த சட்டம் 2019–ஐ மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரம், மனித உரிமை சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொண்டதை கண்டித்தும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், எட்டு வழி சாலை திட்டம், உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக சி.ஐ.டி.யு. மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–


மத்திய அரசு நிறைவேற்றக்கூடிய மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் எதிர்ப்பலை எழுந்துள்ளது. ரெயில்வே, உருக்காலை, மின்சாரம் போன்ற மிக முக்கிய துறைகளை கூட தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி நடக்கிறது. மத்திய பட்ஜெட்டில் 49 சதவீத பங்குகளை தனியாரிடம் ஒப்படைப்பது என அறிவித்துள்ளனர். பொதுத்துறை என்பது மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட துறை. தேர்தலில் வெற்றி, தோல்விக்கு பிறகு ஆட்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.

ஆனால் மக்கள் வரி பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுத்துறைகளை ஆட்சிக்கு வருபவர்கள் பாதுகாக்க வேண்டுமே தவிர, அதை விற்பதற்கு அதிகாரமில்லை. ஆனால் இந்த அரசு பொதுத்துறைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை வேகமாக முன்னெடுத்து செல்கிறது. எடுக்கிறது. ஆகஸ்டு 2–ந் தேதி பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பதை கண்டித்து இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நாடு தழுவிய கண்டன நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. தொடர்ந்து ஒன்றுபட்ட போராட்டங்களும் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் தங்கமோகன், மாவட்ட துணை தலைவர் சவுந்தர்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story