கார்-அரசு பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் நசுங்கி சாவு
மத்தூர் அருகே கார்-அரசு பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
மண்டியா,
மண்டியா தாலுகா ஹெப்பகவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 30). இவருடைய மனைவி மஞ்சுளா (25). இந்த தம்பதியின் மகள் சுகன்யா (10), மகன் சாகர் (6). ரவி பெங்களூரு குமாரசாமி லே–அவுட்டில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவர், வாரந்தோறும் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
அதேபோல, நேற்றும் ரவி தனது குடும்பத்துடன் காரில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கெஞ்ஜலகெரே பகுதியில் சென்றபோது, எதிரே மைசூருவில் இருந்து பெங்களூரு நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக காரும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதிக்குள் கார் பாதியளவு புகுந்தது. இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த ரவி உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், போலீசார் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மண்டியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து பற்றி ரவி மற்றும் மஞ்சுளாவின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மண்டியா அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அவர்களுடைய குடும்பத்தினரிடம் 4 பேரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டது. விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களையும் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
இந்த விபத்தால் பெங்களூரு–மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான கார் மற்றும் தனியார் பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.