எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்


எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
x
தினத்தந்தி 28 July 2019 10:30 PM GMT (Updated: 28 July 2019 6:54 PM GMT)

வேலூரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

வேலூர்,

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சியை சேர்ந்த ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு சேகரிப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூரில் முகாமிட்டுள்ளார். வேலூரில் அவர் தங்கி உள்ள ஓட்டலில் நேற்று மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர்ராஜூ முன்னிலை வகித்தார். வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வரவேற்றார்.

அமைச்சர் கருப்பணன் தலைமையில் வேலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திகேயனின் சகோதரர் பெருமாள், அ.ம.மு.க.வை சேர்ந்த எல்.கே.எம்.பி.வாசு, காங்கிரஸ் கட்சி நிர்வாகி மஸ்தான் என்ற பயஸ்அகமது உள்பட நிர்வாகிகள் மற்றும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த சுமார் 500 பேர் அந்தந்த கட்சியில் இருந்து விலகி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் கருப்பணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க.வினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் பலர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளையும் மக்கள் நம்பவில்லை. அவர்களும் இணைந்துள்ளனர். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஏ.சி.சண்முகம் 100 சதவீதம் நிச்சயமாக வெற்றி பெறுவார். ஏனென்றால் தி.மு.க.வின் வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை. காலச்சூழலுக்கு ஏற்ப அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.

சுயநலத்துக்காக சில நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இருந்து விலகினர். ஆனால் உண்மை தொண்டர்கள் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி வைத்தது தவறு என தி.மு.க. கூறி வருகிறது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பா.ஜ.க. ஆட்சியுடன் கூட்டணி வைத்து 5 மந்திரிகளை தி.மு.க. பெற்றிருந்தது தவறில்லையா?. எங்களுக்கு அல்வா யாரும் கொடுக்க முடியாது. ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் ஏமாற்று வேலை. மக்கள் புத்திசாலிகள். பொய்யான வாக்குறுதிகளை நம்பமாட்டார்கள். தமிழகத்தில் அடுத்த ஆட்சியும் அ.தி.மு.க. ஆட்சிதான். சமூகநீதியை நிலைநாட்டியவர் ஜெயலலிதா. மக்கள் விரோத திட்டங்களுக்கு நாங்கள் அனுமதி அளிக்க மாட்டோம் என்றார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story