திருமண மண்டபத்தில் தூங்கிய பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு


திருமண மண்டபத்தில் தூங்கிய பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 29 July 2019 3:45 AM IST (Updated: 29 July 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் திருமண மண்டபத்தில் தூங்கிய பெண்ணிடம் 10 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை ரெட்டிபாளையம் பாலகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் ராமன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 60). இவர் மேலவீதியில் உள்ள தனது உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். சம்பவத்தன்று இரவு திருமண மண்டபத்தில் உள்ள ஒரு அறையில் அவர் தூங்கினார். இவருடன் மற்ற உறவினர்களும் தூங்கினர்.

அப்போது ஜெயலட்சுமி அருகில் தனது கைப்பையை வைத்திருந்தார். அதில் 10 பவுன் நகை இருந்தது. இந்த நிலையில் காலையில் எழுந்து பார்த்தபோது தங்க செயின் இருந்த பேக்கை காணாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் பேக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.

இது குறித்து அவர் தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்

தஞ்சை அய்யன் கோவில் பூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி ஜோதி (62). இவர் தனது வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஜோதியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை சட்டென்று பறித்தார்.

இதைக்கண்டு திடுக்கிட்ட ஜோதி, திருடன், திருடன் என சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து நகையுடன் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து ஜோதி தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

Next Story