திருக்கனூர் அருகே கூட்டுறவு பால் சங்க கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு; குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


திருக்கனூர் அருகே கூட்டுறவு பால் சங்க கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு; குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 July 2019 10:30 PM GMT (Updated: 28 July 2019 7:42 PM GMT)

திருக்கனூர் அருகே கூட்டுறவு பால் சங்க கொட்டகைக்கு தீ வைத்தவர்களை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கனூர்,

திருக்கனூர் அருகே விநாயகம்பட்டு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அதன் அருகே கூட்டுறவு பால் சங்கம், கூரைக் கொட்டகையின் கீழ் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த சங்கத்தின் கூரைக்கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது. யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் கூரைக்கொட்டகை முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. நேற்றுக் காலை கூரை கொட்டகை தீயில் எரிந்து நாசமாயிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியது.

அதனால் கிராம மக்கள் ஆத்திரம் அடைந்து கூட்டுறவு சங்க கொட்டகைக்கு தீவைத்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விநாயகம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே நடுரோட்டில் மோட்டார் சைக்கிள்களை குறுக்காக நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை 6-30 மணிக்கு தொடங்கிய மறியல் 8-30 மணி வரை நீடித்தது அதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதுகுறித்து முறைப்படி புகார் அளித்தால் விசாரணை நடத்தி தீ வைத்தவர்களை கைது செய்வோம் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.

Next Story