ஐம்பொன் சிலை மாயமான வழக்கை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும் கலெக்டரிடம், இந்து முன்னணியினர் மனு


ஐம்பொன் சிலை மாயமான வழக்கை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும் கலெக்டரிடம், இந்து முன்னணியினர் மனு
x
தினத்தந்தி 30 July 2019 4:30 AM IST (Updated: 30 July 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாரத்தில் ஐம்பொன் சிலை மாயமான வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். அப்போது கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறளானி நல உதவித்தொகை உள்ளிட்ட உதவிகள் கோரி 442 பேர் மனு அளித்தனர். அந்த மனுக்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பெற்று கொண்டார்.

கூட்டத்தில் வருவாய் அதிகாரி ரேவதி, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபுல் காசிம் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் தலைமையில் பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக வந்து அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கொட்டாரம் பெருமாள்புரம் பகுதியில் உள்ள பிள்ளையார் குளத்தில் மீனவர்கள் வலையில் இரண்டரை அடி உயர சிங்கத்தின் மீது அமர்ந்த நிலையில் அம்மன் சிலை கிடைத்தது. அந்த சிலையை அருகில் உள்ள தசரா குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் பரமார்த்தலிங்கபுரம் நேதாஜி நகரை சேர்ந்த ஒருவர் தனது வீட்டுக்கு சிலையை எடுத்து சென்று பூஜை செய்து வழிபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அம்மன் சிலை மாயமாகி விட்டதாக தசரா குழுவினரும், பூசாரியும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட அந்த அம்மன் சிலை ஐம்பொன்னால் ஆனது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையது. சிலை மாயமான வி‌ஷயத்தில் போலீசார் அலட்சிய போக்கை கடைபிடித்து வருகிறார்கள். சிலை மாயம் தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே ஐம்பொன் சிலை மாயமான வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சரல் அருகே உள்ள ராமநாதபுரம் ஊர் தலைவர் மணிகண்டன் மற்றும் ஊர் மக்கள் திரளாக வந்து அளித்த மனுவில், “எங்கள் ஊரில் வேங்கைத்தாவு நிலவியல் என்ற பழமைவாய்ந்த குளம் உள்ளது. இந்த குளத்தில் ஊராட்சிக்கு சொந்தமான 2 குடிநீர் கிணறுகள், மோட்டார் அறை உள்ளன. மோட்டார் மூலமாக தண்ணீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குளத்துக்கு ராஜாக்கமங்கலம் ஊச்சிகால் வாய்க்கால் வழியாக தண்ணீர் வருகிறது. இந்த நிலையில் கிணற்றுக்கு செல்லும் பாதையில் மக்கள் செல்ல முடியாதபடி சிலர் கம்பிகள் நட்டு கேட் போட்டு உள்ளனர். இதனால் குளத்துக்கு செல்ல முடியவில்லை. எனவே பாதையை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

குமரி மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ஜெயன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், குமரி மாவட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வறுமைகோடு பட்டியல் அடிப்படையில் தான் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வறுமைகோடு பட்டியல் போதிய விழிப்புணர்வு மூலமாகவும், வெளிப்படையாகவும் எடுக்கப்படவில்லை. எனவே வறுமைகோடு பட்டியலை புதிதாக தயாரிக்க வேண்டும். மேலும் மார்த்தாண்டம் மேம் பாலத்தின் வழியாக செல்லும் அரசு வாகனங்கள் கீழ் தள பழைய சாலை வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தின் கீழ் உள்ள குறுகலான சாலையை விரிவுபடுத்துதல் அவசியம்’ என்று கூறப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (விடுதலை) கட்சி மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து அளித்த மனுவில், ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் 28 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை விடுவிப்பது தொடர்பாக கவர்னர் மற்றும் மாநில அரசு முடிவு செய்துகொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. எனவே ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் நிலத்தடி நீரை சட்ட விரோதமாக உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதே போல பச்சை தமிழகம் இயக்கத்தினர் அளித்த மனுவில், சிற்றார் பட்டணம் கால்வாயில் தண்ணீர் கொண்டு செல்வதற்காக மாத்தூர் பகுதியில் பரளியாற்றின் குறுக்கே இரு மலைகளை இணைத்து மாத்தூர் தொட்டிபாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் ஆசியாவிலேயே நீளமானதும், உயரமானதும் ஆகும். ஆனால் தொட்டிபாலத்தின் தடுப்பு தூண்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. நீர் கசிவும் ஏற்பட்டு இருக்கிறது. தொட்டிபாலம் காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது. எனவே காமராஜரின் சாதனையை விளக்கும் வகையில் மாத்தூர் தொட்டிபாலத்தின் நுழைவு வாயிலில் அவருக்கு சிலை வைக்க வேண்டும். தொட்டி பாலத்துக்கு பொன் விழா கொண்டாட வேண்டும், என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story