மாவட்ட செய்திகள்

முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கு: ‘2 தி.மு.க. நிர்வாகிகள் தூண்டுதலின் பேரில் என் மகனை கைது செய்துள்ளனர்’ - மதுரையில் சீனியம்மாள் பேட்டி + "||" + Murder of three including former mayor: DMK executives have arrested my son for instigation Ciniyammal Interview

முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கு: ‘2 தி.மு.க. நிர்வாகிகள் தூண்டுதலின் பேரில் என் மகனை கைது செய்துள்ளனர்’ - மதுரையில் சீனியம்மாள் பேட்டி

முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கு: ‘2 தி.மு.க. நிர்வாகிகள் தூண்டுதலின் பேரில் என் மகனை கைது செய்துள்ளனர்’ - மதுரையில் சீனியம்மாள் பேட்டி
நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கில், 2 தி.மு.க. நிர்வாகிகள் தூண்டுதலின் பேரில் என் மகனை போலீசார் கைது செய்துள்ளனர் என்று மதுரையில் சீனியம்மாள் கூறினார்.
மதுரை,

நெல்லை முன்னாள் மேயர் உமாமகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன் மற்றும் அவர்களது வீட்டில் வேலை பார்த்து வந்த பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர், பாளையங்கோட்டையில் உள்ள உமாமகேசுவரியின் வீட்டில் கடந்த 23-ந் தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.


இந்த படுகொலைகள் தொடர்பாக மதுரை கூடல்புதூரில் மகள் வீட்டில் தங்கி இருக்கும் நெல்லையை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான சீனியம்மாளிடம் சமீபத்தில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் முன்னாள் மேயர் உமாமகேசுவரி உள்பட 3 பேர் கொலை தொடர்பாக சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் உள்பட 3 பேரை அதிரடியாக போலீசார் கைது செய்திருப்பது இந்த விவகாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மகன் கைது செய்யப்பட்டது குறித்து மதுரையில் சீனியம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் மேயர் உமாமகேசுவரி கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையாவது நேர்மையாக நடக்க வேண்டும். அரசியல் அழுத்தம் காரணமாகவே எங்கள் குடும்பத்தினர் மீது பழி போட்டுள்ளனர்.

எனது மகனை போலீசார் எங்கு வைத்துள்ளனர் என்று தெரியவில்லை.

நாளை (அதாவது இன்று) என் மகனின் நிலை குறித்து தெரிவிக்க கோரி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம். நெல்லையை சேர்ந்த தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் 2 பேரின் தூண்டுதலின் பெயரிலேயே இந்த கைது நடவடிக்கையும், இந்த பிரச்சினையும் எங்களுக்கு வந்துள்ளது. திரும்பவும் சொல்கிறேன், எனக்கும் உமாமகேசுவரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் நிகழ்ச்சிகளில் மட்டும்தான் நாங்கள் சந்தித்து பேசினோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சீனியம்மாளின் கணவர் சன்னாசி கூறியதாவது:-

உமாமகேசுவரி உள்பட 3 பேர் கொலை வழக்கில் எனது மகன் கார்த்திகேயன் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டுள்ளது. அரசியல் தூண்டுதல் காரணமாகத் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கார்த்திகேயன் நிரபராதி என்பதை சட்டப்படி நிரூபிப்போம்.

என்ஜினீயரிங் படித்த அவனுக்கு ஆந்திராவில் வேலை கிடைத்துள்ளது. எனது மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மதுரையில் தங்கி உள்ளோம். வருகிற 1-ந் தேதி நெல்லைக்கு சென்ற பிறகு அவனை வேலைக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்தோம். இந்த நேரத்தில் அவனை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.