தடை காலம் முடிகிறது: குளச்சல் விசைப்படகு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்கிறார்கள்


தடை காலம் முடிகிறது: குளச்சல் விசைப்படகு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்கிறார்கள்
x
தினத்தந்தி 30 July 2019 11:00 PM GMT (Updated: 30 July 2019 2:57 PM GMT)

தடை காலம் இன்று முடிவதையொட்டி, குளச்சல் விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்கிறார்கள்.

குளச்சல்,

கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் மீன்களின் இனப்பெருக்க காலங்களில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த மீன்பிடி தடை காலம் குமரி மாவட்டத்தில் 2 பருவ காலமாக உள்ளது. கிழக்கு கடலோர பகுதியில் உள்ள சின்னமுட்டத்தில் கடந்த ஏப்ரல் 15 –ந் தேதி முதல் ஜூன் 15–ந் தேதி வரை தடை காலம் அமலில் இருந்தது.

இதுபோல், மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், இனயம், தூத்தூர், நீரோடி போன்ற 40 கடலோர கிராமங்களில் மே 31–ந் தேதி நள்ளிரவு முதல் தடை காலம் தொடங்கியது. இந்த தடை இன்று (புதன்கிழமை) நள்ளிரவு நீங்குகிறது.

இந்த 2 மாத காலத்தில் மேற்கு கடல் பகுதியில் தொழில் செய்யும் விசைப்படகுகள் குளச்சல், முட்டம் மீன் பிடித்துறைமுகங்களில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டன. கேரளா சென்ற குமரி விசைப்படகினர் படகுகளை அங்கு நிறுத்திவிட்டு ஊர் திரும்பினர். அத்துடன், மீனவர்கள் தங்களது படகுகளை பழுதுப்பார்ப்பது, வலை போன்ற உபகரணங்களை சீரமைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

தடை காலம் முடிவதையொட்டி நாளை (வியாழக்கிழமை) அதிகாலை முதல் விசைப்படகுகள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு செல்கின்றன. இதற்காக மீனவர்கள் வலை போன்ற உபகரணங்களை தயார் செய்து வைத்துள்ளனர். மேலும் டீசல், குடிநீர், ஐஸ்கட்டி ஆகியவற்றை படகுகளுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் விசைப்படகுகளை நிறுத்திவிட்டு வந்த குமரி மீனவர்களும் மீண்டும் கேரளாவுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். நாளை முதல் விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்வதை முன்னிட்டு குளச்சல் தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை மரிய செல்வன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

Next Story