திருமணமான 48–வது நாளில் பரிதாபம்: விபத்தில் புதுமாப்பிள்ளை பலி


திருமணமான 48–வது நாளில் பரிதாபம்: விபத்தில் புதுமாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 31 July 2019 4:30 AM IST (Updated: 30 July 2019 11:52 PM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே திருமணமான 48–வது நாளில் விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக பலி ஆனார்.

பெருந்துறை,

ஈரோடு மணல் மேடு பகுதியை சேர்ந்தவர் அசரப் அலி. இவருடைய மகன் முகமது செரீப் (வயது 26). இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி நசிரா மும்தாஜ் (19). முகமது செரீப்புக்கும், நசிரா மும்தாஜுக்கும் திருமணம் ஆகி 48 நாட்கள் தான் ஆகிறது.

நேற்று காலை ஈரோட்டில் இருந்து பெருந்துறை சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைக்கு மோட்டார்சைக்கிளில் முகமது செரீப் சென்று கொண்டிருந்தார். சிப்காட் அருகே சென்றபோது அந்த ரோட்டில் சரக்கு வேன் ஒன்று பின்புறம் நோக்கி திடீரென வந்து உள்ளது. இதில் எதிர்பாராதவிதமாக அவருடைய மோட்டார்சைக்கிளும், சரக்கு வேனும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முகமது செரீப் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தங்கவேலு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முகமது செரீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்த முகமது செரீப்பின் உடலை பார்த்து அவருடைய மனைவி நசிரா மும்தாஜ் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சரக்கு வேனின் டிரைவரான காயன்பு (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story