தாராபுரத்தில் தொடரும் சம்பவம்: பைபாஸ் சாலைக்கு வழிகேட்பது போல் நடித்து வங்கி ஊழியர் வீட்டில் ரூ.5½ லட்சம் கொள்ளை


தாராபுரத்தில் தொடரும் சம்பவம்: பைபாஸ் சாலைக்கு வழிகேட்பது போல் நடித்து வங்கி ஊழியர் வீட்டில் ரூ.5½ லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 31 July 2019 5:30 AM IST (Updated: 30 July 2019 11:58 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் வழிகேட்பது போல் நடித்து ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் ரூ.5½ லட்சத்தை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள உடுமலை ரோட்டில் சென்னியப்பா நகர் உள்ளது. இந்த நடராஜன் (வயது 70). பாரத ஸ்டேட் வங்கியில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி புஷ்பா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பேரக்குழந்தையை கவனித்து கொள்வதற்காக கோவையில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கடந்த சில நாட்களாக நடராஜன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வருகிறார்.

நடராஜனின் வீடு சேதமடைந்து இருந்ததால், வீட்டில் மராமத்து வேலைகளை செய்ய அவர் முடிவு செய்திருந்தார். இதற்கு பணம் தேவைப்பட்டதால், நேற்று காலை 11 மணிக்கு, தனது மோட்டார் சைக்கிளில் உடுமலை ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்றுள்ளார். பின்னர் தனது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்தை எடுத்துள்ளார். பிறகு அந்த பணத்தை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு 11.40 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்தார்.

வீட்டிற்கு சென்றதும் மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தினார். அப்போது அவருக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள், நடராஜனிடம் ‘‘பைபாஸ் ரோட்டுக்கு எப்படி செல்ல வேண்டும்’’ என்று கேட்டுள்ளனர். அதற்கு நடராஜன் ‘‘நேராக சென்றால் பைபாஸ் ரோடு வந்துவிடும்’’ என்று கூறிவிட்டு, பணம் வைத்திருந்த பையுடன் வீட்டிற்குள் சென்றார். பின்னர் நடராஜன் பணப்பையை வீட்டின் அறையில் உள்ள மேஜையில் வைத்து விட்டு, குளியலறைக்கு சென்று விட்டார். பின்னர் குளியலறையில் இருந்து திரும்பி வந்தபோது மர்ம ஆசாமிகளில் ஒருவன், மேஜைமீது வைத்திருந்த பணப்பையை எடுத்து கொண்டு, வீட்டிலிருந்து வேகமாக வெளியேறுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, ‘‘திருடன்.. திருடன்’’ என்று கத்தியவாறு அந்த ஆசாமியை நடராஜன் துரத்தி சென்றுள்ளார். அதற்குள் அந்த நபர் பணப்பையுடன் ஓடிச்சென்று சற்று தொலைவில் மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த மற்றொரு ஆசாமியுடன் ஏறி வேகமாக சென்று தப்பிவிட்டார்.

இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு நடராஜன் தகவல் கொடுத்துள்ளார். இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நடராஜனிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது மர்ம ஆசாமிகள் பற்றி அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், போலீசார் மர்ம ஆசாமிகளை தேட ஆரம்பித்தார்கள்.

அந்த பகுதியில் கடைகளின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில், பணப்பையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். மேலும் அனைத்து பகுதிகளிலும் உள்ள போலீஸ் சோதனைச்சாவடிகளுக்கு தகவல் அளித்து, வாகன சோதனை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் போலீசார் குழுக்களாக பிரிந்து சென்று, நகர் பகுதி முழுவதும் சோதனை நடத்தினார்கள். பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை பிடிக்க முடியவில்லை. ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை பின் தொடர்ந்து சென்று பைபாஸ் சாலைக்கு வழிகேட்பது போல் நடித்து ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாராபுரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை வீட்டில், மர்ம ஆசாமிகள் ரூ.2 லட்சம் மற்றும் 50 பவுன் நகையை திருடிச் சென்றனர். பொது மக்கள் மத்தியில் இந்த சம்பவத்தின் பீதி அடங்குவதற்குள், மீண்டும் பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story