மாவடிக்குளத்தை தூர்வாரக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்


மாவடிக்குளத்தை தூர்வாரக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 31 July 2019 4:30 AM IST (Updated: 31 July 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

மாவடிக்குளத்தை தூர்வாரக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருச்சி,

திருச்சி பொன்மலைப்பட்டியில் 147 ஏக்கர் பரப்பளவில் மாவடிக்குளம் அமைந்துள்ளது. இந்த குளம் தூர்வாரப்படாமல் குப்பைகள் கொட்டப்பட்டு புதர் மண்டி கிடக்கிறது. இந்த நிலையில் மாவடிக்குளத்தை தூர்வாரக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், இயற்கை ஆர்வலர்கள், பொதுவுடைமை இயக்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இந்தநிலையில் போராட்டம் நடத்துவதற்காக அப்பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகி கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் நேற்று காலை திரண்டு ஊர்வலமாக வந்தனர்.

பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) விஜயபாஸ்கர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போராட்டக்காரர்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழைந்து வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து தலைமை பொறியாளர் அலுவலகத்திற்குள் அவர்கள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறுகையில், “மாவடிக்குளம் அந்த பகுதியின் நீர் ஆதாரமாக உள்ளது. இந்த குளம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. அப்போது கலெக்டராக இருந்த ஜெயஸ்ரீமுரளிதரன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் எடுத்த முயற்சியினால் குளம் தூர் வாரும் பணி நடந்தது. தற்போது புதர் மண்டி கிடக்கிறது. மேலும் குளத்தில் இரவு நேரங்களில் மண் எடுத்து செல்லப்படுகிறது. சிலர் குளத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மண் எடுப்பதை தடுத்து நிறுத்தி குளத்தை தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை காலம் தொடங்குவதற்கு முன்பு குளத்தை தூர்வார வேண்டும். இதனால் மழைநீர் குளத்தில் தேங்க வாய்ப்பு ஏற்படும்.

மேலும் காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்படும் போது வாய்க்கால்கள் வழியாக மாவடிக்குளத்திற்கு தண்ணீர் வந்து சேரும். இதனால் இந்த பகுதியில் நீர்வளம் பெருகும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மாவடிக் குளத்தை தூர்வார நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதுபற்றி எந்த அறிவிப்பும் இல்லை. குளத்தை தூர்வாராவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்” என்றார். இதைதொடர்ந்து பொதுப் பணித்துறை அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். அதன்பின் அனை வரும் கலைந்து சென்றனர்.

Next Story