லாரிகள், ஆம்னி பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து: டிரைவர் உள்பட 2 பேர் பலி


லாரிகள், ஆம்னி பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து: டிரைவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 30 July 2019 11:03 PM GMT (Updated: 30 July 2019 11:03 PM GMT)

லாரிகள், ஆம்னி பஸ் அடுத்தடுத்து மோதி விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பலியாகினர்.

நல்லம்பள்ளி,

தொப்பூர் அருகே 2 லாரிகள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட நிலையில், விபத்தில் சிக்கிய லாரிகளில் ஒன்று எதிரே வந்த ஆம்னி பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து அரிசி மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தர்மபுரி மாவட்டம் வழியாக நேற்று காலை வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை சேலம் மாவட்டம் கடம்பூரை சேர்ந்த ரமேஷ் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். கிளனராக ஞானசேகர் இருந்தார். தொப்பூர் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரிசி மூட்டை ஏற்றி சென்ற லாரி முன்னால் மரக்கட்டைகள் ஏற்றி சென்ற லாரி மீது மோதியது.

பின்னர் அரிசி லோடு ஏற்றிச்சென்ற லாரி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி நின்றது. இதில் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் டிரைவர் ரமேஷ் கீழே விழுந்து லாரியின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கிளனர் ஞானசேகர் படுகாயம் அடைந்தார்.

அதே நேரத்தில் அரிசி பாரம் ஏற்றி சென்ற லாரி மோதியதில், கட்டைகள் ஏற்றி சென்ற லாரி தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு சேலம்-தர்மபுரி சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது அந்த லாரி அந்த சாலையில் எதிரே, கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஆம்னி பஸ்சின் பக்கவாட்டில் உரசி விட்டு சாலையோரம் கவிழ்ந்தது. இதில் மும்பையை சேர்ந்த லாரி டிரைவர் பங்கஷ்குமார் சர்மா (40), கிளனர் சுரேஷ்சந்த்சர்மா ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். பஸ் மீது லாரி உரசியதால் அதில் இருந்த பயணிகள் பீதியில் அலறினர்.

இந்த விபத்தில் பஸ்சில் சென்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நிசார் (35), கேரள மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் (50), சங்கீதா(30), எட்வின்(30), வருண்(21), சரத்(26), பஸ் டிரைவர் தேசிங் பேபி(31) உள்பட 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும், சுங்கச்சாவடி ரோந்து படையினர், அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று காயம் அடைந்த லாரி, பஸ் டிரைவர்கள், கிளனர்கள், பயணிகள் அனைவரையும் மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்தில் இறந்த ரமேசின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த நிசார், பிரசாந்த், எட்வின், சங்கீதா ஆகிய 4 பேரும் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பயணி நிசார் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து காரணமாக, தொப்பூர் கணவாய் பகுதியில் 4 வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. பின்னர் போலீசார், சுங்கச்சாவடி ரோந்து படையினர் லாரிகள், பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story