நாகை கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


நாகை கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 2 Aug 2019 4:30 AM IST (Updated: 2 Aug 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

நாகை கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம்,

நாகை கலெக்டர் அலுவலகம் எதிரே வாள்முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாகை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆடி திருவிழா நடைபெற இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல பூஜைகள் முடிந்தவுடன் பூசாரி கண்ணன் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இவர் நேற்று காலை கோவிலுக்கு வந்த பார்த்த போது கோவில் நுழைவு வாயிலில் இருந்த உண்டியலின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கோவிலின் உள்ளே சென்று பார்த்த போது காத்தாயி அம்மன் சன்னதியின் கதவுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர்கள் கோவில் நுழைவுவாயிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

இந்த கோவிலின் உண்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.இதனால் தற்போது உண்டியலில் குறைந்த அளவு பணம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story