புதுப்பேட்டை அருகே துணிகரம், அடகுகடை பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை - இரும்பு பெட்டகத்தை தூக்கி சென்றனர்


புதுப்பேட்டை அருகே துணிகரம், அடகுகடை பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை - இரும்பு பெட்டகத்தை தூக்கி சென்றனர்
x
தினத்தந்தி 3 Aug 2019 4:30 AM IST (Updated: 3 Aug 2019 4:49 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டை அருகே அடகு கடையில் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுப்பேட்டை, 

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள மணப்பாக்கத்தை சேர்ந்தவர் பழனி மகன் பன்னீர்செல்வம் (வயது 55). இவர் நத்தம் ராமர்குளம் மெயின் ரோட்டில் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வழக்கம் போல் பன்னீர்செல்வம் கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் ஷெட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம், கடையின் உள்ளே சென்று பார்த்தார். அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்ததுடன், நகைகள் வைக்கப்பட்டிருந்த சிறிய வகையான இரும்பு பெட்டகத்தை காணவில்லை. உடன் அங்கிருந்த பொதுமக்கள் சுற்றியுள்ள இடங்களில் தேடிப்பார்த்தனர்.

அப்போது அடகு கடையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு விளைநிலத்தில் இருந்த கீற்றுக்கொட்டகையின் கீழ் இரும்பு பெட்டகம் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதில் இருந்த 2½ பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.20 ஆயிரம் ஆகியன கொள்ளை போயிருந்தன. இதன் மதிப்பு ரூ. 1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கடையின் முன்பு மற்றும் உள்ளே வைக்கப்பட்டிருந்த 2 கேமராக்களை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்த கம்ப்யூட்டரையும் எடுத்து சென்றுவிட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பன்னீர்செல்வம் கடையை பூட்டி சென்ற பின்னர், நள்ளிரவில் மர்ம மனிதர்கள் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த இரும்பு பெட்டகத்தை தூக்கி சென்று இருக்கிறார்கள். பின்னர் கீற்றுக்கொட்டகையின் கீழ் அமர்ந்து பெட்டகத்தை உடைத்து அதில் இருந்த நகை, பணத்தை எடுத்து சென்று இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை சேமித்து வைக்கும் கம்ப்யூட்டர் கடையின் மற்றொரு பகுதியில் வைக்கப்பட்டு இருந்தது. எனவே அதில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி பார்த்தனர். அதில் பேண்ட், பனியன் அணிந்த கொள்ளையன் ஒருவனது உருவம் பதிவாகி இருந்தது. மேலும் அவன் முகத்தை மூடிய நிலையில் காணப்பட்டான். தொடர்ந்து கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகை பதிவு செய்யப்பட்டது. மோப்பநாய் அர்ஜூன் சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story