கொரடாச்சேரி அருகே 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கொரடாச்சேரி அருகே 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 4 Aug 2019 3:45 AM IST (Updated: 4 Aug 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி அருகே 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போனது. இதுதொடர்பாக வாகன சோதனையில் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார்.

கொரடாச்சேரி,

கொரடாச்சேரி போலீஸ் சரகம் பெருமாளகரம் மெயின்ரோட்டில் இரட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று மர்மநபர்கள் இந்த கோவிலின் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதேபோல பெருமாளகரம் அருகில் உள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் பொது காளியம்மன் கோவில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து பணத்தை திருடி சென்று விட்டனர். இதுதொடர்பாக கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இக்கோவிலுக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு பிள்ளையார் கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டு திருட்டு போயிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வாகன சோதனை

இந்த நிலையில் கொரடாச்சேரி கமலாபுரம் சாலையில் பெருமாளகரம் அருகில் கொரடாச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின்சிசாரா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிளை மறித்து அதில் வந்த நபரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரையும், அவர் வந்த மோட்டார் சைக்கிளையும் சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் பத்து ரூபாய் பணக்கட்டுகளும், இரும்பாலான சிறிய பாறை ஒன்றும் இருந்துள்ளது. இதை தொடர்ந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை செய்ததில் அவர், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த இலங்குடிபட்டியை சேர்ந்த ஜெய்கணேஷ் (வயது 44) என்பதும், இவர் பெருமாளகரம் இரட்டை மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார், ஜெய்கணேசை கைது செய்தனர். 

Next Story