திருச்சியில் போலீஸ் என கூறி கல்லூரி மாணவியை மிரட்டி கற்பழித்தவர் கைது


திருச்சியில் போலீஸ் என கூறி கல்லூரி மாணவியை மிரட்டி கற்பழித்தவர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2019 5:00 AM IST (Updated: 5 Aug 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் போலீஸ் எனக்கூறி கல்லூரி மாணவியை மிரட்டி கற்பழித்தவர் கைது செய்யப்பட்டார்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி துவாக்குடி பகுதியில் மத்திய அரசு கல்லூரி உள்ளது. இதில் தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி உள்ளனர்.

இங்கு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் தங்கி என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மத்திய அரசு ஊழியரான இவருடைய தந்தை சென்னை கல்பாக்கத்தில் வேலை செய்து வருகிறார். சென்னை கல்பாக்கத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரும், மாணவியும் காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் திருச்சி வந்தார். கடந்த 1-ந் தேதி வெளியே சென்று வருவதாக விடுதியில் கூறிச்சென்ற மாணவி மீண்டும் விடுதி திரும்பவில்லை. இந்நிலையில் திருச்சி வந்த அந்த வாலிபருடன் மாணவி ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் காதலனுடன் கல்லூரி முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் மாணவி நின்று கொண்டிருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்து தன்னை போலீஸ் என்று கூறிக்கொண்டு இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால், பயந்து போன காதலர் உண்மையை கூறியுள்ளனர். உடனே அந்த வாலிபர், காதலரை தாக்கிவிட்டு மாணவியை விடுதியில் விடுவதாக அழைத்து சென்றுள்ளார்.

ஆனால், அந்த வாலிபர் மாணவியை விடுதிக்கு அழைத்துச் செல்லாமல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் வைத்து அவரை தாக்கி கற்பழித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. வாலிபர் தாக்கியதில் படுகாயம் அடைந்த காதலர்கள் 2 பேரும் திருச்சியில் உள்ள வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மற்றும் திருவெறும்பூர் உதவி போலீஸ் கமிஷனர் உமேஷ் பிரவீன் குமார் டோங்ரே ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேற்று விசாரணை நடத்தினர். மேலும், மாணவி மற்றும் அவரது காதலனிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்கள் கூறிய அடையாளங்கள் மற்றும் கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆகியவற்றை வைத்து சம்பந்தப்பட்ட வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் துவாக்குடி வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 31) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக துருவி, துருவி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், போலீஸ் என்று கூறி காதலனை தாக்கிவிட்டு மாணவியை கற்பழித்தது அவர்தான் என்பது தெரியவந்தது. அதன்பேரில், கற்பழித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் போலீஸ் என கூறி ஏமாற்றுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

து வாக்குடி பகுதியை சுற்றிலும் பல கல்லூரிகள் இருப்பதால் போதைப்பொருள் விற்கும் கும்பல் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதைப்பொருளை சப்ளை செய்வதாகவும் கூறப்படுகிறது. அதனால் மாணவ-மாணவிகளின் எதிர்கால நலன் கருதி போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

விடுதியில் இருந்த மாணவி வெளியே சென்றது எப்படி?

பா திக்கப்பட்ட மாணவி கடந்த 1-ந் தேதி விடுதியில் இருந்து வெளியில் சென்று இருக்கிறார். அவர் வெளியில் செல்ல வார்டனிடம் முறையாக அனுமதி பெற்று சென்றாரா? அல்லது அவராகவே வெளியில் சென்றாரா?, 2 நாட்களாக அவர் விடுதிக்கு திரும்பவில்லை, இதுகுறித்து அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தீர்களா?, போலீசிடம் புகார் தெரிவித்தீர்களா? என்று கல்லூரி நிர்வாகத்திடம் அடுக்கடுக்கான கேள்விகளை போலீசார் கேட்டனர். கல்லூரியில் படிக்கும் வெளியூர் மாணவிகள் வெளியில் தங்கி படித்தால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால்தான் கல்லூரி விடுதியில் சேர்த்து பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள். விடுதியில் முறையான விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற சம்பவத்தை தவிர்த்து இருக்கலாம் என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆதங்கப்பட்டனர்.

Next Story